Tuesday, April 29, 2008
பெண்ணின் அங்கங்களைக் கண்டு மயங்காதே (பஜ கோவிந்தம் 3)
நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்
நாரி - அழகான பெண்களின்
ஸ்தனபர - அழகிய கொங்கைகளையும்
நாபிதேசம் - வயிற்றுப் பிரதேசங்களையும்
த்ருஷ்வா - பார்த்து
மாகா மோஹ ஆவேசம் - மயக்க ஆவேசம் அடையாதீர்கள்.
ஏதன் - இவையெல்லாம்
மாம்ஸ வஸ ஆதி விகாரம் - புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள்
மனஸி விசிந்தய வாரம் வாரம் - மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.
***
29 ஏப்ரல் 2008 அன்று சேர்க்கப்பட்டது:
புலனடக்கம் மேற்கொண்டு தன்னை உணர விரும்புபவர்களுக்கு ஏற்ற அறிவுரை இது. இங்கே ஆணை முன்வைத்துப் பெண்ணின் அழகைப் பற்றி சொல்கிறார். ஆணின் திரண்ட தோள்களையும் நிமிர்ந்த நெஞ்சினையும் வீரம், அன்பு தெறிக்கும் முகத்தையும் கண்களையும் காது மடல்களையும் கூரிய மூக்கினையும் சிவந்த வாயிதழ்களையும் அந்த இதழ்களின் மேல் வளர்ந்திருக்கும் முறுக்கு மீசையையும் பற்றி பல இலக்கியங்கள் பேசுகின்றன - அப்படிப் பேசப்படுவதாலும் நடைமுறையில் பார்ப்பதாலும் ஆணின் இந்த அழகுகள் பெண்ணைக் கவர்கின்றன என்று தெரிகிறது. அதனால் இந்தப் பாட்டைப் பெண்ணை முன் வைத்துப் பாடியிருந்தால் ஆணின் அழகைக் கூறி அந்த அழகும் மாம்ஸ வசாதி விகாரம் என்று சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எக்காலத்திலும் ஆணை மயக்கும் பெண்ணின் அங்கங்களில் முதன்மையானவற்றை இங்கே சொல்லியிருக்கிறார். சொல்வதற்குப் பெரிய பட்டியல் இருந்தாலும் எடுத்துக்காட்டாக இருப்பதிலேயே அதிகம் கவரும் இரண்டை மட்டும் சொன்னால் போதும் என்று நினைத்தாரோ என்னவோ மார்பகங்களையும் தொப்புளையும் மட்டும் சொல்லி மற்றவற்றை உய்த்துணர விட்டுவிட்டார்.
ஆண் பெண்ணைப் பற்றியும் பெண் ஆணைப் பற்றியும் நினைக்கும் போதெல்லாம் முன் வந்து நிற்பவற்றை 'ஊனும் கொழுப்பும் மாறி நிற்கும் வடிவங்கள்' என்று மீண்டும் மீண்டும் நினைத்தால் தானே புலனடக்கம் வந்துவிடும் என்பது உண்மை தான்.
Labels:
Bhaja Govindham,
Vishnu,
திருமால்,
பஜகோவிந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த இடுகையின் முதற்பகுதி 'பஜ கோவிந்தம்' பதிவில் 18 அக்டோபர் 2005 அன்று இடப்பட்டது.
//நினைக்கும் போதெல்லாம் முன் வந்து நிற்பவற்றை 'ஊனும் கொழுப்பும் மாறி நிற்கும் வடிவங்கள்' என்று மீண்டும் மீண்டும் நினைத்தால் தானே புலனடக்கம் வந்துவிடும் என்பது உண்மை தான்.//
:-))
அதே போல் கடவுளைப் பற்றி நினைக்கும் போது உங்களுக்கு என்ன வருகிறது மனதில்?
அவதார உருவங்கள் (இராமன், பார்வதி, சிவன்...) ?
- இவை எல்லாம் என்ன ஊன் வடிவம் இல்லையா? .
இதுகளின் முகத்தைப்பார், கையைப் பார், காலைபார் என்று போற்றிப்பாடும் பாட்டுகளும், வந்து எனது முலையைப் பார் என்று சொல்லும் ஆண்டாள் வகையறாக்களும் எதைப் பார்த்து உருகினார்கள்?
கண்ணன் திருமேனி ,டவுசர் மேனி என்பெதல்லாம் நீங்கள் வேண்டாம் என்று சொல்லும்ம் அதே மாமிச வடிவ வர்ணனைகள்தான்.
கடவுளின் உருவத்தை போற்றுவது, சிலாகிப்பதை விட்டு வெளிவந்தால் தானாக மற்ற ஊன் வடிவங்களின் மயக்கங்களில் இருந்தும் வெளிவர முடியும்.
**
ஊன்/உடல் மயக்கம் என்பது பொதுவாக இருக்க வேண்டும்.
மீனாட்ச்சியைப் பார் என்ன அழகு என்று சொல்லிவிட்டு , மீனாவைப் பார்க்காதே ஊன் உடம்பு என்று சொல்வது , கேப்மாரித்தனம் இல்லையா குமரன்?
**
1.கடவுளை நினைக்கும் போது , உங்களுக்கு எந்த ஊன் வடிவமும் வரமால் சும்மா சூன்யம் தோன்றினால் (இஸ்லாமியருக்கு கூட மெக்கா கட்டிடம் வரும் ) நீங்கள் மதத்தில் இருந்து விலகி மனிதராகி விட்டீர்கள் என்று பொருள்.
2.கடவுளை நினக்கும்போது அருகில் துன்பப்படும் சக மனிதர்களின் உருவம் உங்களுக்கு தோன்றினால் , நீங்கள் கடவுளாகிவிட்டீர் என்பதறிக.
கல்வெட்டு. தங்கள் மேலான அறிவுரைக்கு மிக்க நன்றி.
அங்கங்கே சில தேவையில்லாத சொற்களைத் தூவியிருக்கிறீர்கள். அதனால் இந்தப் பின்னூட்டத்தை மறுத்துவிடலாம் என்றொரு எண்ணம் தோன்றியது. ஆனால் பின்னூட்டத்தின் திரண்ட பொருளில் மனம் ஒப்புவதால் இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டிருக்கிறேன். உங்கள் பின்னூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டோ அது சொல்லப்பட்டிருக்கும் முறையைப் பற்றியோ விலாவாரியாகப் பேச விருப்பமில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் என் நன்றிகள்.
Pl VISIT
www.freewebs.com/gopalseva
R.Devarajan
தங்களின் சேவை மிகப்பெரிய சேவை திரு.தேவராஜன். மதுரையின் கோபால்சேவா நிறுவனத்தினரின் பொத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். வீட்டில் இருக்கும் சின்ன நூலகத்தில் கோபால்சேவா நிறுவனத்தினரின் பொத்தகங்கள் நிறைய இருக்கின்றன.
நான் தற்போது அமெரிக்காவில் வாழ்கிறேன். கோபால்சேவா நிறுவனத்தினரின் பொத்தகம் ஏதேனும் வேண்டுமென்றால் இங்கே அனுப்ப இயலுமா?
Post a Comment