Saturday, June 26, 2010

விளாம்பழமும் நாவற்பழமும்...

கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்


இந்த சுலோகத்தையும் நாம் நிறைய முறை சொல்லியிருக்கிறோம். எனக்கும் பொருள் புரிந்தும் புரியாமலும் தான் சொல்லியிருக்கிறேன். இன்று பொருள் எழுதலாம் என்று உட்கார்ந்தால் கபித்த என்றால் என்ன என்று தெரியவில்லை. உடனே இணைய சமஸ்கிருத அகராதியில் தேடிக் கண்டுபிடித்தேன். அது ஆங்கிலத்தில் Wood-apple என்று பொருள் போட்டிருந்தது. அது என்ன என்று தெரியவில்லை. உடனே கூகிளாண்டவரிடம் அதன் படத்தைக் காட்டு என்று கேட்டால் விளாம்பழத்தைக் காட்டுகிறார். அடடா, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் இந்தப் பழத்தைக் கொண்டு வந்து அப்படியே அவருக்குப் படைத்துவிட்டு நாம் சாப்பிடுவதற்கு முன்னர் மட்டும் சர்க்கரை கலந்து உண்போமே அந்தப் பழம் தான் கபித்த பழமா என்று தோன்றியது.

மற்றபடி இந்த சுலோகம் மிகவும் எளிமையான சுலோகம் தான்.

கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்

பூத
கண ஆதி சேவிதம் - பூத கணங்கள் முதற்கொண்டு அனைவராலும் வணங்கப்படுபவன்.

கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்.

உமா சுதம் - உமையின் மகன்.

சோக விநாச காரணம் - கவலைகள் தீர்வதற்கான காரணன்.

விக்னேஷ்வர - தடைகளுக்குத் தலைவன்.

பாத பங்கஜம் நமாமி - திருவடி தாமரைகளுக்கு போற்றி!

யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்!

இனி மேல் இந்த சுலோகத்தின் பொருள் மறக்காது என்று நம்புகிறேன்!

Thursday, June 17, 2010

கந்தனுக்கு மூத்தவன் கணேசன்!ஸுமுகசைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ


ஐந்து கரத்தானின் பதினாறு திருநாமங்களைக் கூறும் சுலோகம் இது. இதனை நாமாவளியாகச் சொல்லும் போது

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூம்ரகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:


என்று சொல்லிப் போற்றுவோம்.

சுலோகத்தைப் பொருளுக்காகப் பிரித்தால்

ஸுமுக ச ஏகதந்த ச கபில: கஜகர்ணக
லம்போதர ச விகட: விக்னராஜ: விநாயக:
தூமகேது: கணாத்யக்ஷ பாலசந்த்ர: கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ


என்று அமையும்.

ஸுமுக (sumukha) - அழகான, ஆனந்தமான, அன்பான திருமுகத்தை உடையவன்
ஏகதந்த (Ekadhantha)- ஒற்றைக் கொம்பன்
கபில (kapila) - சிவந்த, மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தை உடையவன்
கஜகர்ணக (ghajakarNaka) - யானைக்காதன்
லம்போதர (lambOdhara)- பெரும்வயிற்றன்
விகட: (vikata) - ஆனந்தத்தைத் தருபவன்
விக்னராஜ: (vignaraaja) - தடைகளுக்கு அரசன்
விநாயக: (vinaayaka) - தனக்கு மிக்கவர் இல்லாதவன்
தூமகேது: (duumakEtu)- தடைகளைக் குறிப்பால் உணர்த்துபவன்
கணாத்யக்ஷ: (ganaathyaksha) - பிரபஞ்ச சக்திகளின் முதல்வன் (கணங்களின் முதல்வன் - கணபதி)
பாலசந்த்ர (paalachandra) - நிலவைப் போன்ற நெற்றியை உடையவன்
கஜானன (gajaanana) - யானைமுகன்
வக்ரதுண்ட (vakrathunda) - வளைந்த துதிக்கையன்
சூர்ப்பகர்ண (suurpakarNa) - முறக்காதன்
ஹேரம்ப (hEramba) - அம்பிகையின் அன்பிற்குரிய மகன்
ஸ்கந்தபூர்வஜ (skandhapuurvaja) - கந்தனுக்கு மூத்தவன்

இப்பதினாறு திருநாமங்களைச் சொல்லி வணங்க ஆனைமுகன் பிரசன்ன வதனனாய் மிக்க மகிழ்ந்து அருள் புரிவான்!

***

இந்த எழுத்துப்பதிவை ஒலிப்பதிவாக்கித் தந்த சுப்புரத்தினம் ஐயாவிற்கு மிக்க நன்றி.

Monday, June 14, 2010

அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்


அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
- இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

ஜெய் ஹனுமான் ஞான குண சாகர!