Saturday, July 17, 2010

சரஸ்வதி நமஸ்துப்யம்...


சிறு குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கும் சுலோகங்களில் சுக்லாம்பரதரம் சுலோகத்திற்கு அடுத்த சுலோகம் இது தான் என்று நினைக்கிறேன். அந்த வயதில் படிப்பு தானே மிக முக்கியம். அதனால் கலைவாணியை வேண்டும் இந்த சுலோகத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

ரொம்ப எளிமையான சுலோகம். ஒவ்வொரு சொல்லாகப் படித்துக் கொண்டு வந்தாலே பொருள் புரிந்துவிடும்.

சரஸ்வதி - தேவி சரஸ்வதி!

நம: துப்யம் = நமஸ்துப்யம் - உனக்கு நமஸ்காரங்கள்.

வரதே - வரம் தருபவளே!

காமரூபிணி - வேண்டியவற்றைத் தருபவளே!

வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் - கல்வித் தொடக்கத்தை

கரிஷ்யாமி - செய்கிறேன்

சித்தி: பவது மே சதா - அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

வேண்டுபவற்றை எல்லாம் தரும் வரமான கல்வியைத் தொடங்கும் போது அது நன்கு சித்தியாக அன்னை சரஸ்வதியை வேண்டுவது தானே முறை!

Friday, July 2, 2010

கற்பூரம் போன்ற நிறத்தை உடையவன்!


கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சார சாரம் புஜகேந்த்ர ஹாரம்
சதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே
பவம் பவானி சஹிதம் நமாமி!


இன்று தான் முதன்முதலாக இந்த சுலோகத்தைப் படித்தேன். மிகவும் எளிமையான சுலோகம். அற்புதமாக இருக்கிறது.

கற்பூர கௌரம் - கற்பூரம் போன்ற நீறு பூத்த வெண்மையான நிறத்தை உடையவன்!

கருண அவதாரம் - கருணையே வடிவெடுத்தவன்

சம்சார சாரம் - இந்த உலகங்களுக்கெல்லாம் அடிப்படையானவன்

புஜகேந்த்ர ஹாரம் - பாம்புகளின் தலைவனை மாலையாக அணிந்தவன்

சதா வஸந்தம் ஹ்ருதய அரவிந்தே - மனத்தாமரையில் என்றும் வசிப்பவன்

பவம் - உலகம், உயிர் அனைத்திற்கும் காரணன்

பவானி சஹிதம் - என்றும் அம்பிகையைப் பிரியாதவன்

நமாமி - வணங்குகிறேன்.

கற்பூரத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவனை, கருணையே வடிவானவனை, உலகங்களுக்கெல்லாம் சாரமானவனை, பாம்பரசனை அணிந்தவனை, மனத்தாமரையில் என்றும் வசிப்பவனை, உலகங்களுக்கெல்லாம் காரணனை, அம்பிகை நாதனை அடியேன் வணங்குகிறேன்!

ஓம் நம:சிவாய!