Saturday, October 9, 2010

வந்தே பிருந்தாவனசரம்


யாதவாத்புதயம்! கண்ணனின் திருக்கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு வடமொழிக் காவியம்! வேதாந்த தேசிகன் என்னும் வைணவ ஆசாரியர் இயற்றியது! இதன் முதல் சுலோகம் இந்த சுலோகம். மிக அழகான சுலோகம்.

வந்தே பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்


கண்ணன் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றைச் சொல்லி முதல் வரியைத் துவங்குகிறார் ஆசாரியர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு! அந்த அன்பே வடிவமாக ஆயர்பாடியில் திரிந்தவர் கோபியர்களும் கோபர்களும். அந்த அன்பெல்லாம் பெற்று அன்பின் இமயமாய் திகழ்ந்தான் கண்ணன்!

பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்! பிருந்தாவனத்தில் வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்!

அடுத்த வரியில் ஆசாரியரின் மொழி விளையாட்டு தொடங்குகிறது. ஜயந்தீ என்று ஒரு பொருளிலும் வைஜயந்தீ என்று வேறொரு பொருளிலும் சொல் அமைய அடுத்த வரியைப் பாடியிருக்கிறார்.

சஹஸ்ரநாமம் என்றால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம் தான். அது போல் ஜயந்தி என்றால் அது கிருஷ்ண ஜயந்தி தான்! வேறு எத்தனையோ ஜயந்திகள் இருந்தாலும் ஜயந்தி என்ற சொல் கிருஷ்ண ஜயந்திக்கே விதப்பான (சிறப்பான) ஒன்று.

ஜயந்தீ ஸம்பவம்! குமாரஸம்பவம் என்று சிவகுமாரனின் பிறப்பைக் கூறும் காவியத்தைப் படைத்தானே காளிதாசன்! அங்கே வரும் அதே பொருளில் தான் இங்கேயும் ஸம்பவம் என்ற சொல் அமைகிறது! கிருஷ்ண ஜயந்தியில் பிறந்தவன் கண்ணன்!

தாம வைஜயந்தீ விபூஷணம்! மாலைகளில் எல்லாம் சிறந்த மாலை காட்டுப்பூக்களால் ஆன பல வண்ணப் பூக்கள் நிறைந்த மணமுள்ள மலர்கள் சிலவும் மணமில்லா மலர்கள் சிலவும் ஆன வைஜயந்தீ என்னும் மலர் மாலை!

காட்டில் இந்த யாதவன் கன்றுகள் மேய்க்கச் செல்லும் போது அங்கு மலர்ந்திருக்கும் பலவண்ண மலர்களைக் கொய்து மாலையாக்கி அணிந்து கொள்வானாம். அப்படிப்பட்ட வைஜயந்தீ மாலையை மிக அழகான அணிகலனாக அணிந்து கொண்டிருக்கும் எளிமையானவன் எங்கள் கண்ணன்!

அந்த முழுமுதற்பொருளை நீர்மையின் தீரத்தை 'வந்தே' என்று பலமுறை போற்றி வணங்குவோம்!