Monday, July 23, 2012

ஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி!


இன்று திருவாடிப்பூரம்! கோதை நாச்சியாரின் திருவவதார தினம்! அவள் மேல் பராசர பட்டரும் வேதாந்த தேசிகனும் இயற்றியுள்ள சுலோகங்களை இன்று சொல்லி அவளை வணங்கலாம்.


**

இந்த சுலோகம் எம்பெருமானாருக்குப் பின்னர் வைணவ ஆசாரியராக எழுந்தருளியிருந்த பராசர பட்டர் இயற்றியது. இவர் கூரத்தாழ்வானின் திருமகனார். இந்த சுலோகம் தற்போது திருப்பாவையை ஓதுவதற்கு முன்னர் தனியனாக ஓதப்படுகின்றது.

நீளா துங்க ஸ்தன கிரி தடீம் ஸுப்த முத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத ஸிர: சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ச்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய:

நீளா துங்க ஸ்தன கிரி தடீம் - நீளாதேவியாகிய நப்பின்னைப் பிராட்டியின் மலைகள் போன்ற தனங்களில்

ஸுப்த முத்போத்ய கிருஷ்ணம் - தூங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணனை எழுப்பி

பாரார்த்யம் ஸ்வம் - தான் அவனுக்கே என்றும் எப்பொழுதும் எந்த நிலையிலும் அடிமையாக இருப்பதை

ச்ருதி சத ஸிர: சித்தம் - நூற்றுக்கணக்கான வேத வேதாந்தங்களில் சொல்லியிருப்பதை

அத்யாபயந்தீ - உணர்த்தி

ஸ்வோச்சிஷ்டாயாம் - தன்னால் சூடிக் கொடுக்கப்பட்ட மாலைகளால்

ச்ரஜி நிகளிதம் - அவனைக் கட்டி

யா பலாத் க்ருத்ய புங்க்தே - பலவந்தமாக அவனை யார் அனுபவிக்கிறாளோ

கோதா தஸ்யை - அந்த கோதைக்கு

நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: - மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள்! என் வணக்கங்கள்!

நப்பின்னைப் பிராட்டியின் மலைகள் போன்ற தனங்களில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பி, நூற்றுக்கணக்கான வேத வேதாந்தங்களில் சொல்லியிருப்பதைப் போல், உயிராகிய தான் இறைவனாகிய திருமகள் கேள்வனான கண்ணனுக்கே உரிமையாக இருப்பதை அவனுக்கு உணர்த்தி, தான் சூடிக்கொடுத்த மாலைகளால் அவனை உரிமையுடன் கட்டி அவனை அனுபவித்த அந்த கோதைக்கே மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள் உரியதாகுக!

**

இந்த சுலோகம் வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்ட கோதா ஸ்துதி என்னும் காவிய நூலில் வரும் முதல் சுலோகம்.

ஸ்ரீ விஷ்ணுசித்த குல நந்தன கல்பவல்லீம்!
ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம்!
சாக்ஷாத் க்ஷமாம்! கருணயா கமலாமி வாந்யாம்!
கோதாம் அனன்ய சரண: சரணம் ப்ரபத்யே!

ஸ்ரீ விஷ்ணுசித்த குல நந்தன கல்பவல்லீம் - ஸ்ரீ விஷ்ணுசித்தரான பெரியாழ்வாரின் குலத்திற்கு மகிழ்வினைத் தரும் கற்பகக் கொடியே!

ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம் - திருவரங்கன் என்னும் ஹரிசந்தன மரத்துடன் இணைந்து திவ்ய தரிசனம் தருபவளே!

சாக்ஷாத் க்ஷமாம்! - பொறுமையில் உண்மையிலேயே பூமாதேவியே!

கருணயா கமலாமி வாந்யாம்! - கருணையில் திருமகளாம் இலக்குமியை ஒத்தவளே!

கோதாம்! - கோதையே!

அனன்ய சரண: - வேறு எந்த கதியும் இல்லாத நான்

சரணம் ப்ரபத்யே! - உன் திருவடிகளையே கதியென்று அடைகிறேன்!

ஸ்ரீ விஷ்ணுசித்தரான பெரியாழ்வாரின் குலத்திற்கு மகிழ்வினைக் கொடுக்கும் குலக்கொடியே! அவரது நந்தவனத்தில் இருக்கும் அரங்கராசன் என்னும் ஹரிசந்தன மரத்தில் படர்ந்திருக்கும் கற்பகக்கொடி போன்றவளே!

விஷ்ணுவை என்று சித்தத்தில் வைத்திருக்கும் ஆழ்வார்கள், அடியார்கள் என்னும் அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாக அவர்கள் மகிழத் தோன்றிய கற்பகக் கொடியே!

பொறுமையின் இருப்பிடமான பூமாதேவியே! (ஆண்டாள் பூமாதேவியின் அவதாரம்)கருணையில் திருமகளை ஒத்தவளே! கோதையே! வேறு கதியொன்றும் இல்லாத அடியேன் உன் திருவடிகளையே ஒரே கதியாக அடைகின்றேன்!

**

Wednesday, July 11, 2012

அச்யுதாஷ்டகம் - பலச்ருதி

அச்யுதஸ்யாஷ்டகம் ய: படேத் இஷ்டதம்
ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: சஸ்ப்ருதம்
வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ருவ்விஸ்வம்பரஸ்
தஸ்ய வச்யோ ஹரிர் ஜாயதே ஸத்வரம்

அச்யுதஸ்யாஷ்டகம் - அச்யுதனின் அஷ்டகமான இந்த ஸ்தோத்திரத்தை

ய: - யார்

படேத் - படிக்கிறார்களோ

இஷ்டதம் - தனது இஷ்ட தெய்வத்தின் மேல்

ப்ரேமத: - அன்புடன்

ப்ரத்யஹம் - தினந்தோறும்

பூருஷ: சஸ்ப்ருதம் - பரமனின் மேல் ஆசையுடன்

வ்ருத்தத: ஸுந்தரம் - அழகுடைய இந்த ஸ்தோத்திரம்

கர்த்ருவ்விஸ்வம்பரஸ் - அகில நாயகனுடைய

தஸ்ய - அவர்

வச்யோ ஹரிர் ஜாயதே ஸத்வரம் - விரைவில் ஹரியினுடைய பதத்தை அடைவார்கள்


இது பலச்ருதி சுலோகம். இந்த அச்யுதாஷ்டகம் என்ற எட்டு பாடல்களைப் படிப்பதால் வரும் பயனைக் கூறும் பாடல்.

அச்யுதாஷ்டகமான இந்த அழகிய ஸ்தோத்திரத்தை யார் தனது இஷ்ட தெய்வமான பரமனின் மேல் மிகுந்த ஆசையும் அன்பும் கொண்டு தினந்தோறும் படிக்கிறார்களோ அவர்கள் உலகநாயகனான ஹரியின் பதத்தை விரைவில் அடைவார்கள்.

Monday, August 29, 2011

அச்யுதாஷ்டகம் - 7 & 8



வித்யுதுத்யோ தவத்ப்ரஸ் புரத்வாஸஸம்
ப்ராவ்ருடம்போதவத்ப்ரோல்லஸத்விக்ரஹம்
வன்யயா மாலயா சோபிதோர: ஸ்தலம்
லோஹிதாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜே

வித்யுதுத் யோதவத் ப்ரஸ்புரத் வாஸஸம் - மின்னலைப் போல் ஒளி வீசும் மஞ்சள் பட்டாடை (பீதாம்பரம்) அணிந்தவன்!

ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்லஸத் விக்ரஹம் - மழைக்காலத்து மேகம் போல் அழகுடன் திகழும் திருமேனி உடையவன்!

வன்யயா மாலயா சோபிதோ ர:ஸ்தலம் - காட்டு மலர் மாலையால் (வனமாலையால்) நன்கு விளங்கும் திருமார்பை உடையவன்!

லோஹித அங்க்ரி த்வயம் - பொன் போல் சிவந்த இரு திருவடிகளை உடையவன்!

வாரிஜாக்ஷம் - தாமரைக் கண்ணன்!

பஜே - அவனைப் போற்றுகிறேன்!




குஞ்சிதை : குந்தலைர் ப்ராஜமானானனம்
ரத்னமௌலிம் லஸத்குண்டலம் கண்டயோ:
ஹாரகேயூரகம் கங்கணப்ரோஜ்ஜவலம்
கிங்கிணிமஞ்ஜுலம் ச்யாமலம் தம் பஜே


குஞ்சிதை : குந்தலைர் ப்ராஜமானானனம் - சுருண்ட அழகிய தலைமுடியால் சூழப்பட்ட திருமுகத்தை உடையவன்!

ரத்ன மௌலிம் - இரத்தின திருமுடியை அணிந்தவன்!

லஸத்குண்டலம் - ஒளிவீசும் குண்டலங்களை அணிந்தவன்!

கண்டயோ: ஹார - கழுத்தில் பொன்னிழைகள் அணிந்தவன்!

கேயூரகம் கங்கண ப்ரோஜ்ஜவலம் - கேயூரம், கங்கணங்களால் விளங்கும் தோள்களும் கைகளும் உடையவன்!

கிங்கிணி மஞ்ஜுலம் - இனிய ஒலி எழுப்பும் கிங்கிணிகள் அணிந்தவன்!

ச்யாமலம் தம் பஜே - அந்த மேகவண்ண சியாமளனை வணங்குகிறேன்!


Sunday, July 31, 2011

அச்யுதாஷ்டகம் - 5 & 6



அச்யுதாஷ்டகத்தின் ஐந்தாம் சுலோகம் இது.

ராக்ஷஸ க்ஷோபித: ஸீதயா சோபிதோ
தண்டகாரண்ய பூ புண்யதா காரண:
லக்ஷ்மணேனான்விதோ வானரைஸ்ஸேவிதோ
அகஸ்த்ய ஸம்பூஜீதோ ராகவ: பாது மாம்

ராக்ஷஸ க்ஷோபித:
- ராடசதர்களின் புகழை மங்கச் செய்தவன்!

ஸீதயா சோபிதோ - சீதைக்கு அணிகலன் போன்றவன்!

தண்டகாரண்ய பூ புண்யதா காரண: - தண்டகாரண்ய காட்டு நிலத்தைப் புனிதப்படுத்தியவன்!

லக்ஷ்மணேனான்விதோ - இலக்குவனனைப் பிரியாதவன்!

வானரைஸ்ஸேவிதோ - வானரங்களால் பணியப்படுபவன்!

அகஸ்த்ய ஸம்பூஜீதோ - அகத்தியரால் நன்கு பூசிக்கப்பட்டவன்!

ராகவ: - (அப்படிப்பட்ட) இரகு குலத்தில் பிறந்த இராகவன்

பாது மாம் - என்னைக் காக்கட்டும்!

இந்த சுலோகம் இராமனை மட்டுமே பாடுகிறது.

அடுத்த சுலோகம் கிருஷ்ணனை மட்டுமே பாடுகிறது.



தேநுகாரிஷ்டகானிஷ்ட க்ருத்த்வேஷிஹா
கேசிஹா கம்ஸஹ்ருத்வம்சிகாவாதக:
பூதனாகோபக: ஸுரஜாகேலனோ
பாலகோபாலக: பாது மாம் ஸர்வதா

தேநுக அரிஷ்ட கானிஷ்ட க்ருத் த்வேஷி ஹா - துவேஷம் கொண்டு வந்த தேனுகன், அரிஷ்டன் இருவரையும் கொன்றவன்!

கேசிஹா - கேசியைக் கொன்றவன்!

கம்ஸ ஹ்ருத் வம்சிகா வாதக: - கம்சனின் இதயத்திற்கு என்றும் துன்பத்தைக் கொடுத்தவன்!

பூதனாகோபக: - பூதனையைக் கோவித்துக் கொண்டவன்!

ஸுரஜாகேலனோ - குழலில் விளையாடுபவன்!

பாலகோபாலக: - (அப்படிப்பட்ட) பாலகோபாலன்

பாது மாம் ஸர்வதா - என்னை எப்போதும் காக்கட்டும்!

Thursday, July 14, 2011

அச்யுதாஷ்டகம் - 3 & 4



அச்யுதாஷ்டகத்தின் மூன்றாம் சுலோகம் இது.

விஷ்ணவே ஜிஷ்ணவே சங்கினே சக்ரிணே
ருக்மிணிராகிணே ஜானகீஜானயே
வல்லவீவல்லபாயார்சிதாயாத்மனே
கம்ஸவித்வம்ஸினே வம்சினே தே நம :

விஷ்ணவே - எங்கும் நிறைந்தவனே!

ஜிஷ்ணவே - அனைத்தையும் அனைவரையும் வென்றவனே!

சங்கினே - சங்கை ஏந்தியவனே!

சக்ரிணே - சக்கரத்தை ஏந்தியவனே!

ருக்மிணி ராகிணே - ருக்மிணி மணாளனே!

ஜானகீ ஜானயே - சீதையின் மணாளனே!

வல்லவீ வல்லபா - கோபியர்களின் காதலனே!

யார்சிதா - அருச்சிக்கப்படுபவனே!

யாத்மனே - உயிர்களுக்கு உயிரானவனே!

கம்ஸ வித்வம்ஸினே - கம்சனை வதைத்தவனே!

வம்சினே - குழல் ஊதுபவனே!

தே - உனக்கு

நம: - என் வணக்கங்கள்!



அடுத்த சுலோகம்

க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண
ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே
அச்யுதாநந்த ஹே மாதவாதோக்ஷஜ
த்வாரகாநாயக த்ரௌபதீரக்ஷக

க்ருஷ்ண
- கருப்பனே!

கோவிந்த - இடையனே! பசுக்களைக் காப்பவனே!

ஹே ராம - ஹே ராமா! கவர்பவனே!

நாராயண - அனைத்திலும் இருப்பவனே! அனைத்திற்கும் இருப்பிடமே!

ஸ்ரீபதே - திருமகள் மணாளனே!

வாஸுதேவ - எல்லோரிலும் வசிப்பவனே! வசுதேவ குமாரனே!

அஜித - வெல்லமுடியாதவனே!

ஸ்ரீநிதே - வைத்த மாநிதியே!

அச்யுத - நழுவாதவனே! நழுவவிடாதவனே!

அநந்த - எல்லையில்லாதவனே!

ஹே மாதவ - ஹே திருமாலே!

அதோக்ஷஜ - மறைப்பொருள் அறிவே!

த்வாரகாநாயக - துவாரகை நாதனே!

த்ரௌபதீரக்ஷக - துரௌபதியைக் காப்பவனே!

அடுத்த இரு சுலோகம் அடுத்த இடுகையில்.

Friday, July 1, 2011

அச்யுதாஷ்டகம் - 2



அச்யுதாஷ்டகத்தின் அடுத்த சுலோகம் இது.

அச்யுதம் கேசவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகிநந்தனம் நந்தஜம் ஸந்ததே

அச்யுதம்
- வெல்ல முடியாதவன்! நன்னிலையைத் தருபவன்!

கேசவம் - குழலழகன்!

ஸத்யபாமாதவம் - சத்யபாமா நாயகன்!

மாதவம் - திருமகள் கேள்வன்!

ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தாங்கியவன்! செல்வன்!

ராதிகா ராதிதம் - இராதையின் பெருவிருப்பமானவன்!

இந்திரா மந்திரம் - தாமரையாள் விளங்கும் திருகோவிலானவன்! திருமகளை மார்பில் ஏந்தியவன்!

சேதஸா ஸுந்தரம் - நெஞ்சிற்கு அழகன்! நினைத்தாலே இனிப்பவன்!

தேவகி நந்தனம் - தேவகிக்கு இனியவன்!

நந்தஜம் ஸந்ததே - அனைவருக்கும் இனியவன்!

வெல்லமுடியாதவனும், குழலழகனும், சத்யபாமையின் கணவனும், திருமகள் கேள்வனும், செல்வனும், இராதையின் மணவாளனும், தாமரையாளின் திருக்கோவிலும், நினைத்தாலே இனிப்பவனும், தேவகி மைந்தனும், அனைவருக்கும் நெருங்கியவனும் ஆன கண்ணனை போற்றுகிறேன்!






**

Friday, June 24, 2011

அச்யுதாஷ்டகம் - 1


சிறந்த சந்தத்தில் அமைந்திருக்கும் பாடல் இது. ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றியது. மிக எளிமையானது. ஓரிரு சுலோகங்களைத் தவிர.

அஷ்டகம் என்றால் எட்டு சுலோகங்களும் ஒரு பலச்ருதியும் கொண்ட ஸ்தோத்ரம்.

அச்யுதம் என்று தொடங்குவதால் இந்த துதிக்கு அச்யுதாஷ்டகம் என்ற பெயர் அமைந்தது போலும்.

இந்தத் துதியில் வரும் முதல் சுலோகம் இது!



அச்யுதம் கேசவம் ராம நாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே

அச்யுதம் - என்றும் ஒரே நிலையில் இருப்பவன்! தன்னை அண்டியவர்கள் கீழ் நிலையை அடைய விடாதவன்! இவனை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பிறப்பு சுழல் கரும வசத்தால் அமைவதில்லை!

கேசவம் - அழகிய சுருண்ட முடிகளை உடையவன்! கேசி என்னும் அரக்கனை வதைத்தவன்! அரன் அயன் என்று உலகு அழித்து அமைத்து உளனே என்று ஆழ்வார் பாடியதைப் போல் க என்ற பிரம்மனுக்கும் ஈச என்ற ஈசானனுக்கும் அந்தர்யாமி ஆனவன்!

ராம - மகிழ்ச்சியைத் தருபவன்! மகிழ்ச்சியே உருவானவன்! கவர்பவன்!

நாராயணம் - நாரங்கள் என்னும் உயிர்கள், உலகங்கள் அனைத்திற்கும் இருப்பிடமானவன்! நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன்! நாரங்களை நடத்துபவன்! நீர்மையன்! நீரைப் போன்ற தன்மை கொண்டவன்! அடியவர் தரும் உருவங்களை எல்லாம் ஏற்று அதில் நிறைபவன்!

க்ருஷ்ண - கவர்பவன்! களையெடுப்பவன்! கருப்பன்! பண்படுத்துபவன்! கண்ணன்!

தாமோதரம் - அன்பிற்கு வசப்படுபவன்! யசோதையாலும் சகாதேவனாலும் கட்டப்பட்ட கயிற்றைத் தாங்கியவன்!

வாஸுதேவம் - வசுதேவன் மைந்தன்! எங்கும் வசிப்பவன்! ஒளி வடிவானவன்!

ஹரிம் - கவர்பவன்! பொருளைக் கவர்பவன்! உள்ளத்தைக் கவர்பவன்! உயிரைக் கவர்பவன்! திருடன்!

ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தன் மார்பில் தாங்குபவன்! செல்வன்!

மாதவன் - திருமகள் கேள்வன்! திருமால்! பெருந்தவ வடிவானவன்!

கோபிகா வல்லபம் - கோபியர் கொஞ்சும் ரமணன்! கோபியர் உள்ளத்திற்கு நெருங்கியவன்! கோபியர்களின் அந்தரங்கன்!

ஜானகீ நாயகம் - ஜனக குமாரியின் நாயகன்!

ராமசந்த்ரம் - சந்திரனைப் போல் கவர்பவன்!

பஜே - என்றும் துதிக்கிறேன்!

தன் அன்பர்கள் நிலை தாழ விடாதவனும், சுருள்முடி அழகனும், மகிழ்ச்சியைத் தருபவனும், நீர்மையாளனும், கண்ணனும், அன்பிற்கு வசப்படுபவனும், எங்கும் வசிப்பவனும், கவர்பவனும், செல்வனும், திருமகள் கேள்வனும், கோபியர் உள்ளம் நிறைபவனும், சீதை மணாளனும் ஆன ராமசந்திரனை என்றும் பஜிக்கிறேன்!