Wednesday, May 6, 2009

நீர் மோரை விற்பதா? கோவிந்தனை விற்பதா?


'என்ன இது வாசலில் யாரோ இனிய குரலில் கோவிந்தா, தாமோதரா, மாதவா என்று கூவிக் கொண்டே செல்கிறார்களே'

"அடியே தயிர்க்காரி. தயிர்க்கலயத்தைத் தலையில் தாங்கிக் கொண்டு செல்கிறாய். ஆனால் தயிர் தயிர் என்று கூவாமல் வேறு ஏதோ பெயர் சொல்லிக் கூவுகிறாயே?"

'என்ன இது? இவள் ஒன்றும் விடை சொல்ல மாட்டேன் என்கிறாளே. இந்தப் பெண்களே இப்படித் தான். நம் அகமுடையாளும் சில நேரம் இப்படித் தான் இந்தப் பெயர்களைக் கூவிக் கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் ஒளபாசனத்திற்குத் (இல்லறத்தார் செய்யவேண்டிய தினசரி தீ வழிபாடு) தேவையான பொருட்களை எடுத்து வைக்காமல் இவளும் கோவிந்த தாமோதர மாதவா என்று புலம்பத் தொடங்கிவிடுகிறாள். உலகத்தில் எல்லா பெண்களுக்கும் இந்த நோய் வந்துவிட்டது போலும்'

இப்படி எண்ணிக் கொண்டே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கண்ணனின் பாதக்கமலங்களில் பறி கொடுக்கப்பட்ட மனத்துடன் 'கோவிந்தா தாமோதரா மாதவா' என்று கூவிக் கொண்டு நீர் மோர் விற்றுச் செல்லும் இடைப்பெண்ணைப் பார்த்துக் கொண்டே இல்லத்தினுள் செல்கிறார் அந்த வீட்டுக்கு உரியவர்.

***

விக்ரேது காமாகில கோப கன்யா
முராரி பதார்பித சித்த வ்ருத்தி
தத்யோதகம் மோஹவசாத் அவோசாத்
கோவிந்த தாமோதர மாதவேதி


ஒரு கோபகன்னிகை தன்னுடைய மனம், மெய், மொழி என்ற அனைத்தும் கண்ணனின் பாதக்கமலத்தில் அடைக்கலமாகக் கொடுத்து அந்த இன்பம் தந்த மயக்கத்தில் தன் தலையில் நீர்மோரைத் தாங்கிச் சென்றாலும் 'கோவிந்த தாமோதர மாதவா' என்று கூவிச் செல்கிறாள்.