கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்
இந்த சுலோகத்தையும் நாம் நிறைய முறை சொல்லியிருக்கிறோம். எனக்கும் பொருள் புரிந்தும் புரியாமலும் தான் சொல்லியிருக்கிறேன். இன்று பொருள் எழுதலாம் என்று உட்கார்ந்தால் கபித்த என்றால் என்ன என்று தெரியவில்லை. உடனே இணைய சமஸ்கிருத அகராதியில் தேடிக் கண்டுபிடித்தேன். அது ஆங்கிலத்தில் Wood-apple என்று பொருள் போட்டிருந்தது. அது என்ன என்று தெரியவில்லை. உடனே கூகிளாண்டவரிடம் அதன் படத்தைக் காட்டு என்று கேட்டால் விளாம்பழத்தைக் காட்டுகிறார். அடடா, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் இந்தப் பழத்தைக் கொண்டு வந்து அப்படியே அவருக்குப் படைத்துவிட்டு நாம் சாப்பிடுவதற்கு முன்னர் மட்டும் சர்க்கரை கலந்து உண்போமே அந்தப் பழம் தான் கபித்த பழமா என்று தோன்றியது.
மற்றபடி இந்த சுலோகம் மிகவும் எளிமையான சுலோகம் தான்.
கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்
பூத கண ஆதி சேவிதம் - பூத கணங்கள் முதற்கொண்டு அனைவராலும் வணங்கப்படுபவன்.
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்.
உமா சுதம் - உமையின் மகன்.
சோக விநாச காரணம் - கவலைகள் தீர்வதற்கான காரணன்.
விக்னேஷ்வர - தடைகளுக்குத் தலைவன்.
பாத பங்கஜம் நமாமி - திருவடி தாமரைகளுக்கு போற்றி!
யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்!
இனி மேல் இந்த சுலோகத்தின் பொருள் மறக்காது என்று நம்புகிறேன்!
2 comments:
http://findmeacure.com/2006/07/22/wood-apple-or-beal-fruit/
The wood apple or the vlambalam
as we call it when we present the same as nivedhanam to vinayaka is used for ayurvedha medicinal purposes .
Please see the link.
subbu rathinam
உண்மை தான் ஐயா. எல்லா காய்கனிகளுலும் மருத்துவ குணம் இருந்தாலும் இனிப்புச் சுவையில்லாத பல காய்கனிகளில் மிகுதியான மருத்துவ குணம் இருக்கிறது போலும். இறைவன் படைப்பே விசித்திரமானது.
Post a Comment