Friday, June 24, 2011

அச்யுதாஷ்டகம் - 1


சிறந்த சந்தத்தில் அமைந்திருக்கும் பாடல் இது. ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றியது. மிக எளிமையானது. ஓரிரு சுலோகங்களைத் தவிர.

அஷ்டகம் என்றால் எட்டு சுலோகங்களும் ஒரு பலச்ருதியும் கொண்ட ஸ்தோத்ரம்.

அச்யுதம் என்று தொடங்குவதால் இந்த துதிக்கு அச்யுதாஷ்டகம் என்ற பெயர் அமைந்தது போலும்.

இந்தத் துதியில் வரும் முதல் சுலோகம் இது!



அச்யுதம் கேசவம் ராம நாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே

அச்யுதம் - என்றும் ஒரே நிலையில் இருப்பவன்! தன்னை அண்டியவர்கள் கீழ் நிலையை அடைய விடாதவன்! இவனை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பிறப்பு சுழல் கரும வசத்தால் அமைவதில்லை!

கேசவம் - அழகிய சுருண்ட முடிகளை உடையவன்! கேசி என்னும் அரக்கனை வதைத்தவன்! அரன் அயன் என்று உலகு அழித்து அமைத்து உளனே என்று ஆழ்வார் பாடியதைப் போல் க என்ற பிரம்மனுக்கும் ஈச என்ற ஈசானனுக்கும் அந்தர்யாமி ஆனவன்!

ராம - மகிழ்ச்சியைத் தருபவன்! மகிழ்ச்சியே உருவானவன்! கவர்பவன்!

நாராயணம் - நாரங்கள் என்னும் உயிர்கள், உலகங்கள் அனைத்திற்கும் இருப்பிடமானவன்! நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன்! நாரங்களை நடத்துபவன்! நீர்மையன்! நீரைப் போன்ற தன்மை கொண்டவன்! அடியவர் தரும் உருவங்களை எல்லாம் ஏற்று அதில் நிறைபவன்!

க்ருஷ்ண - கவர்பவன்! களையெடுப்பவன்! கருப்பன்! பண்படுத்துபவன்! கண்ணன்!

தாமோதரம் - அன்பிற்கு வசப்படுபவன்! யசோதையாலும் சகாதேவனாலும் கட்டப்பட்ட கயிற்றைத் தாங்கியவன்!

வாஸுதேவம் - வசுதேவன் மைந்தன்! எங்கும் வசிப்பவன்! ஒளி வடிவானவன்!

ஹரிம் - கவர்பவன்! பொருளைக் கவர்பவன்! உள்ளத்தைக் கவர்பவன்! உயிரைக் கவர்பவன்! திருடன்!

ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தன் மார்பில் தாங்குபவன்! செல்வன்!

மாதவன் - திருமகள் கேள்வன்! திருமால்! பெருந்தவ வடிவானவன்!

கோபிகா வல்லபம் - கோபியர் கொஞ்சும் ரமணன்! கோபியர் உள்ளத்திற்கு நெருங்கியவன்! கோபியர்களின் அந்தரங்கன்!

ஜானகீ நாயகம் - ஜனக குமாரியின் நாயகன்!

ராமசந்த்ரம் - சந்திரனைப் போல் கவர்பவன்!

பஜே - என்றும் துதிக்கிறேன்!

தன் அன்பர்கள் நிலை தாழ விடாதவனும், சுருள்முடி அழகனும், மகிழ்ச்சியைத் தருபவனும், நீர்மையாளனும், கண்ணனும், அன்பிற்கு வசப்படுபவனும், எங்கும் வசிப்பவனும், கவர்பவனும், செல்வனும், திருமகள் கேள்வனும், கோபியர் உள்ளம் நிறைபவனும், சீதை மணாளனும் ஆன ராமசந்திரனை என்றும் பஜிக்கிறேன்!

6 comments:

Kavinaya said...

எனக்கு பிடிச்ச ஸ்லோகம். இப்பதான் பொருள் புரியுது. மிக்க நன்றி குமரா.

//சகாதேவனாலும் கட்டப்பட்ட//

அது என்ன? தெரியலையே...

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா.

போருக்கு முன் மந்திராலோசனை நடந்து கொண்டிருக்கும் போது, கிருஷ்ணன் சகாதேவனிடம் 'இங்கே இருப்பவர்களிலேயே நீ தான் அறிவில் சிறந்தவன். இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்பான். அப்போது சகாதேவன் ஒரு பட்டியலைச் சொல்வான். அதில் இரண்டு இப்போது நினைவிற்கு வருகிறது - பாஞ்சாலியின் தலைமுடியை வெட்டிவிட வேண்டும்; கிருஷ்ணா, உன்னைக் கட்டிப் போட வேண்டும். அதனைக் கேட்டு கண்ணன் நகைத்து என்னைக் கட்டிவிடுவாயா என்று கேட்க, அவனையே தியானித்து சகாதேவன் அவனைக் கட்டிப் போடுவான். அதனைத் தான் குறித்தேன் அக்கா.

Kavinaya said...

ஹை! இது நல்லாருக்கே :) கண்ணன் சமர்த்து. சகாதேவன் அவனை விட சமர்த்து :)

குட்டிக்கதைக்கு நன்றி :)

kaialavuman said...

சிசுபாலனை அழித்தபோது பாஞாசாலி தன் உடையை கிழித்து கண்ணன் விரலை கட்டி இருக்கிறாள். அது விரலை மட்டும் என்பதால் விட்டுவிட்டீர்களா?

அவனை கட்ட அன்பும் பக்தியும்தான் வழி. அல்லவா.

அஷ்டகத்தில் மற்ற பாடலுக்காகவும் அவற்றின் விளக்கங்களுக்காகவும் காத்திருக்கிறோம்.

குமரன் (Kumaran) said...

நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன். அடுத்த பாடல்களுக்கும் விளக்கம் சொல்லியிருக்கிறேன். அடுத்த இடுகைகளைப் பாருங்கள்.

kaialavuman said...

மன்னிக்கவும் குமரன்,

நாம் ஒரு அவசரக்குடுக்கை.
எப்பொழுதும் போல அவசரமாக கருத்து இட்டுவிட்டேன்.