Wednesday, September 1, 2010

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்

இன்று கண்ணனின் பிறந்த நாள்! கோகுலாஷ்டமி! கிருஷ்ண ஜெயந்தி! ஜன்மாஷ்டமி! கண்ணனின் லீலைகளைக் கூறும் புராணம் பாகவத புராணம்! வேதங்கள் அனைத்தையும் நான்காகப் பகுத்த பின்னரும், அவற்றின் உட்பொருளை சூத்திர வடிவில் பிரம்ம சூத்திரமாக எழுதிய பின்னரும், உபவேதமான ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை எழுதிய பின்னரும் முழு மன நிறைவும் பெறாத வியாஸ பகவான் நாரத மகரிஷியின் அறிவுரைக்கிணங்க இயற்றியதே கிருஷ்ண லீலாம்ருதமாகிய ச்ரிமத் பாகவதம்!

பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இருக்கிறது. அது தான் இது!

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
கோவர்த்தனோத்தாரணம்
கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
குந்தீ ஸுதா பாலனம்
ஏதத் பாகவதம் புராண கதிதம்
ச்ரி க்ருஷ்ண லீலாம்ருதம்


ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம் - முன்னொரு காலத்தில் தேவகி தேவியின் திருக்கர்ப்பத்தில் உதித்தான்!

கோபீ க்ருஹே வர்த்தனம் - யசோதா பிராட்டியாகிய கோபியின் வீட்டில் வளர்ந்தான்!

மாயா பூதன ஜீவிதாபஹரணம் - மாயையுடன் வந்த பூதனையின் உயிரைக் கவர்ந்தான்!

கோவர்த்தனோத்தாரணம் - கோவர்த்தன மலையைத் தூக்கினான்!

கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம் - கம்சனை அழித்து கௌரவர் முதலானவர்களை ஒழித்தான்!

குந்தீ ஸுதா பாலனம் - குந்தியின் மைந்தர்களான பாண்டவர்களைக் காத்தான்!

ஏதத் பாகவதம் புராண கதிதம் - இதுவே புராணங்களில் சிறந்ததான பாகவதம்!

ச்ரி க்ருஷ்ண லீலாம்ருதம் - ச்ரி கிருஷ்ணனின் லீலைகள் என்னும் அமுதம்!

குணானுபவத்தில் ஈடுபடும் அடியார்கள் எண்ணி எண்ணி இன்புறத் தக்க வகையில் கண்ணனின் லீலைகளைக் கூறும் வரிகள் ஒவ்வொரு வரியும்! கூடியிருந்து குளிர வேண்டும்!

1 comment:

Kavinaya said...

இரத்தினச் சுருக்கமாக கண்ணனின் கதை. நன்றி குமரா.