Friday, May 16, 2008

சிவனுடன் தோழமை வேண்டுமா? (லிங்காஷ்டகம் 8 & பயன்)


ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம். (முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றாலும் அவர்களில் சிறந்தவர்களாக இந்திரன், வருணன், யமன், அக்னி, வாயு, அஸ்வினி தேவர்கள், சூரியன், சந்திரன் என்று சிலரையே சொல்வார்கள். புராணங்களில் தேவர்களின் பிரதிநிதிகளாக இந்த தேவர்களையே காட்டியிருப்பார்கள். அவர்களாலேயே வணங்கப்பட்ட லிங்கம் எனும்போது எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்ட லிங்கம் என்று அறியக் கிடைக்கிறது. தேவர்களும் தங்கள் குருவான தேவகுரு பிருகஸ்பதி காட்டிய வழியிலேயே சிவபூஜை செய்கின்றனர். அதனால் சுரகுரு சுரவர என்று தேவகுருவை முதலில் இந்தப் பாடலில் குறித்திருக்கின்றனர். )

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம். (பூவுலகில் உள்ளவர்கள் எட்டுவிதமான மலர்களாலும் எட்டிதழ் தாமரையாலும் அர்ச்சிக்க தேவலோகத்தவர்கள் தேவலோக மலர்களை இட்டு அர்ச்சிப்பது தானே இயற்கை. அது தான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவலோக மலர்களான பாரிஜாத மலர்கள் கொண்டு எப்போதும் அர்ச்சிக்கப் படும் லிங்கம்)

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம். (லிங்க உருவில் இருக்கும் இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன். லிங்க உருவத்திற்கும் இது முதல்; இது முடிவு என்று எந்தப் பகுதியையும் சுட்டிக் காட்ட முடியாது. அது போல் அணுவிற்கும் அணுவாகவும் அப்பாலுக்கும் அப்பாலாகவும் உள்ளவன் அவன். பெரிதிலும் பெரியன். சிறிதிலும் சிறியன். எல்லாமே அவனுள் அடக்கம். அவன் எல்லாவற்றிலும் அடக்கம். எல்லா உயிர்களும் அவனுள் அடக்கம். அவன் எல்லா உயிர்களிலும் அடக்கம். என்னுள் தன்னையும் தன்னுள் என்னையும் காண்பவன் ஞானி என்றே கீதாசார்யனும் கூறுகிறான். )

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே

லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது

யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்

சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும்

சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

எங்கும் நிறைந்தவன் அவன். அதனால் எல்லா இடங்களும் சிவ சன்னிதானமே. அதனால் எந்த இடத்தில் இந்த எட்டுப் பாடல்களையும் பாடி மகிழ்ந்து அவனையும் மகிழ்விக்கலாம்.

இத்துடன் லிங்காஷ்டகம் என்னும் எட்டு சுலோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்ரம் நிறைவுற்றது.

சிவார்ப்பணம்.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'லிங்காஷ்டகம்' பதிவில் 29 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

11 comments:

G.Ragavan said...
வடமொழிக் குவியல் கொண்டு சிவனைத் தொழுதழுகும் கவிதைக்குப் பொருள் சொல்லிப் பாங்காய் சிறப்பித்த குமரனுக்கு எனது வாழ்த்துகள்.

ஒரு ஐயப்பாடு........அசுரகுருவும் சிவனடியவர்தானே....அவரும் பூசித்தார் என்பதும் பெருமைதானே. சுக்கிராச்சாரியார் விடுபட்ட காரணம் யாதாயிருக்கும்?

10:55 AM, October 29, 2006
--

நாமக்கல் சிபி said...
குமரன்,

லிங்காஷ்டகம் பாடல்களும் விளக்கமும் அருமை.

அனைத்து பாடல்களையும் ஒரே பதிவில் போடுங்களேன். மொத்தமாக மனனம் செய்து படிக்க வசதியாக இருக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

11:51 AM, October 29, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்

தோத்திரப் பாடல்களின் இறுதிப் பாடலை இரண்டு முறை அனுசந்திப்பார்கள்; அதே போல் நீங்களும் லிங்காஷ்டக இறுதிப் பாடலை, இரண்டு முறை பதிவாய் போட்டு அனுசந்தித்து விட்டீர்கள் போலும் :-) Blogger பிரச்னை கூட எப்படி எல்லாம் உதவி செய்கிறது பாருங்கள்!

லிங்காஷ்டகம் தொடர் தந்தமைக்கு மிக்க நன்றி; சிவசிவ!

12:01 PM, October 29, 2006
--

குமரன் (Kumaran) said...
பூக்குவியல் என்றாற்போல் வடமொழிக் குவியல் என்றீர்களோ இராகவன்?

அசுரகுரு விடுபடவில்லை இராகவன். முன்பே சித்த சுராசுர வந்தித லிங்கம் என்று சொல்லியிருக்கிறதே. அதிலேயே அசுரகுருவையும் சேர்த்துவிட்டார் போலும் பாடலாசிரியர்.

12:12 PM, October 29, 2006
--

G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
பூக்குவியல் என்றாற்போல் வடமொழிக் குவியல் என்றீர்களோ இராகவன்? //

ஆம் குமரன்.

// அசுரகுரு விடுபடவில்லை இராகவன். முன்பே சித்த சுராசுர வந்தித லிங்கம் என்று சொல்லியிருக்கிறதே. அதிலேயே அசுரகுருவையும் சேர்த்துவிட்டார் போலும் பாடலாசிரியர். //

ஓ அப்படி அவர் உள்ளே வருகிறாரா. சரி.

7:40 PM, October 29, 2006
--

வல்லிசிம்ஹன் said...
மனம் நிரம்ப அனுபவித்தேன்
குமரன்.

நன்றி. கூடவே எஸ்.பி.பி குரலும் கேட்பதுபோல் ஒரு பிரமை.

இந்த லிங்காஷ்டகத்தைப் பதித்து
நற்பலன் அனைத்தும் உங்களுக்குக்
கிடைக்கட்டும்.

9:17 PM, October 29, 2006
--

சிவமுருகன் said...
//ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்//

இந்த வரிகளில் ஸுர என்பது ஸூரர்களான அசுரர்களை குறிப்பதாக எண்ணிவிட்டேன், தங்களது விளக்கத்தால் தெரி(ளி)ந்து கொண்டேன்.

அருமையான விளக்கம்.

11:12 PM, October 29, 2006
--

குமரன் (Kumaran) said...
சிபி. நீங்கள் கேட்டுக் கொண்ட படி அடுத்தப் பதிவாக இட்டுவிட்டேன். நீங்களும் அதனைப் பார்த்துப் பின்னூட்டம் இட்டுவிட்டீர்கள். :-)

5:13 AM, October 30, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி கே.ஆர்.எஸ். :-)

5:13 AM, October 30, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி வல்லியம்மா. எல்லாம் தங்கள் ஆசிகள்.

5:14 AM, October 30, 2006
--

குமரன் (Kumaran) said...
//ஸூரர்களான அசுரர்களை //

சூரபத்மனைக் குறிப்பது என்று எண்ணிக் கொண்டீர்களா சிவமுருகன்?

5:15 AM, October 30, 2006