Tuesday, June 17, 2008
கீதை கொஞ்சம் கங்கை கொஞ்சம் கண்ணன் கொஞ்சம் (பஜ கோவிந்தம் 20)
பகவத் கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜல லவ கணிகா பீதா
சக்ருதபி யேன முராரி சமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
பகவத் கீதா கிஞ்சித் அதீதா - பகவத் கீதையை கொஞ்சமாவது படித்து அதன் படி நடந்திருந்தாலோ
கங்கா ஜல லவ கணிகா பீதா - கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பக்தியுடன் பருகியிருந்தாலோ
சக்ருதபி யேன முராரி சமர்ச்சா - முன்னர் எப்போதோ செய்த புண்ணிய வசத்தால் தற்செயலாக ஒருவன் நாராயணனை அர்ச்சித்திருந்தாலோ
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா - அப்படிப்பட்டவன் யமனுடன் வாதிக்க வேண்டிய தேவையின்றி முக்தியை அடைவான்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
***
முன்னர் ஒரு பாட்டில் கங்கையில் நீராடினாலும், நோன்புகள் நோற்றாலும், தான தருமங்கள் செய்தாலும் ஞானமில்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் முக்தியடைய மாட்டான் என்று சொன்னவர் இங்கு அதற்கு நேர் எதிராகச் சொல்கிறாரே என்று எண்ணலாம். கொஞ்சம் சிந்தித்தால் என்ன சொல்கிறார் என்பது விளங்கும்.
கங்கையில் நீராடிவிட்டு, நோன்புகள் நோற்றுவிட்டு, தான தருமங்கள் செய்துவிட்டு ஆனால் ஆத்ம ஞானத்தை அடையாமல் இறுமாப்பினை அடைந்தவன் முக்தி அடையமாட்டான்; அங்கே சொல்வது ஞானத்தின் முக்கியத்துவத்தை.
ஆனால் அதே நேரத்தில் கங்கையில் நீராடுவதும் (கங்கை நீரை ஒரு துளி அருந்துவதும்), நோன்புகள் நோற்பதும் (முராரியை வணங்குவதும்), தான தருமங்கள் செய்வதும் (கீதையைப் படித்து அதன் படி நடத்தலும்) முக்திக்கு முதல் படியான ஹ்ருதய சுத்தத்தைக் கொடுக்கும். அந்த இதயத் தூய்மையை அடைந்த பின்னரே ஞானம் தோன்றும். பின்னர் முக்தி கிடைக்கும். அதனால் முதல் படியான இதயத் தூய்மையை அடையும் வழிகளை இங்கே கூறுகிறார். இங்கே சொல்வது இதயத் தூய்மை அடைவதின் முக்கியத்துவத்தை.
Labels:
Bhaja Govindham,
Vishnu,
திருமால்,
பஜகோவிந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த இடுகை 'பஜகோவிந்தம்' பதிவில் 25 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
8 comments:
SK said...
குமரன்,
நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பாடலுக்கும்[பாடல் 17] இந்தப் பாடலுக்கும் கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கின்றன என நினைக்கிறேன்.
அது[17] தெளிவாக முக்தி என்ற சொல்லைச் சொல்லியிருக்கிறது.
விடுதலை அடைய இன்னின்ன வழி என்று தெளிகிறது அந்தச் செய்யுள்.
ஆனால், இதில் [19] கவனமான ஒரு சொல்லைக் கையாண்டிருக்கிறார்.
'யமனுடன் வாதாடத் தேவையில்லை' என்று மட்டும்!
இதில் [19] குறிப்பிட்டிருக்கிற செயல்கள் ஒருவனது பாவத்தைப் போக்கும் என்றுதான் அதற்குப் பொருள் என எண்ணுகிறேன்.
பாவம் தொலைந்தால் முக்தி கிட்டும் என ஆகாது.
நிச்சயம் நரகத்திலிருந்து தப்பிக்கலாம்
யமன் சித்திரகுப்தனிடம் கணக்கு கேட்கும் போது,
'எல்லாப் பாவங்களும் அழிந்திருப்பதால், 'இவன் கணக்கில் ஒன்றும் பாவங்கள் இல்லை' எனச் சொல்லுவார்.
'இல்லையே, இவன் இன்னின்னது செய்திருக்கிறான் என்று அன்று சொன்னாயே?' என எமன் கேட்கும் போது,
'செய்திருந்தான்; ஆனால், மேற்கூறிய மூன்றில் எதேனும் ஒன்றைச் செய்ததால், இவன் பாவங்கள் அனைத்தும் தொலைந்து போய் பாவமற்றவனாக இருக்கிறான்' எனப் பதில் வரும்.
ஆகவே, எமனுடன் வாதாடத் தேவையில்லை எனக் கூறுகிறார், இந்தச் செய்யுளில்.
இது என் கருத்து.
June 25, 2006 8:27 PM
---
குமரன் (Kumaran) said...
அருமையான விளக்கம் எஸ்.கே. மிக்கப் பொருத்தமாக இருக்கிறது உங்கள் விளக்கம். மிக்க நன்றி.
June 25, 2006 9:48 PM
---
SK said...
20 என்பதற்குப் பதில் 19 என்று குறிப்பிட்டு விட்டேன்.
தயவு செய்து திருத்திக் கொள்ளவும்.
June 26, 2006 1:38 PM
---
குமரன் (Kumaran) said...
அப்படித்தான் திருத்திப் படித்துக் கொண்டேன் எஸ்.கே.
June 26, 2006 2:23 PM
---
Ram.K said...
குமரனுக்கும் எஸ்கேவுக்கும் நன்றி.
June 27, 2006 8:34 PM
---
குமரன் (Kumaran) said...
வந்துப் படிச்சுப் பின்னூட்டமும் போட்டதற்கு நன்றி பச்சோந்தி அண்ணா. :-)
June 27, 2006 10:29 PM
---
rnateshan. said...
சூப்பர் குமரன்!
என்ன இந்தக் குழுமங்களில் சேர்ந்தது தப்பாகப் போச்சு!எதையுமே ஒழுங்காப் படிக்க முடியலே.
July 02, 2006 11:01 AM
---
குமரன் (Kumaran) said...
நன்றி நடேசன் ஐயா. நானும் நீங்கள் சொல்லும் 'நம்பிக்கை' குழுமத்தில் சேர்ந்திருக்கிறேன். உங்கள் மின்னஞ்சல்களைப் பார்த்தேன். இன்னும் படிக்கவில்லை.
July 03, 2006 11:37 AM
//இதயத் தூய்மை அடைவதின் முக்கியத்துவத்தை//
நல்ல விளக்கம், குமரா. நன்றி, உங்களுக்கும், எஸ்.கே அண்ணாவிற்கும்.
நன்றி அக்கா.
படித்துப் பார்க்கிறேன் விஜய்.
http://vasantruban.blogspot.com/search/label/GITA
here you can download gita in mp3
Post a Comment