Showing posts with label சின்ன சின்ன சுலோகங்கள். Show all posts
Showing posts with label சின்ன சின்ன சுலோகங்கள். Show all posts

Thursday, April 28, 2011

ஸத்ய ஸாயி வந்தனம்!


என்னுடைய தினசரி காலை வழிபாட்டில் சொல்லும் இரு சுலோகங்களும் சாயி காயத்ரி மந்திரங்களும்...

ஹ்ருதாகாசே சதா பாந்தம் சாந்தம் ஆனந்த ரூபினம்
ஞானபானும் அஹம் வந்தே ஸத்குரும் ஸத்ய ஸாயினம்


இதய ஆகாயத்தில் என்றும் இருப்பவரும், அமைதியும் மகிழ்ச்சியுமே வடிவானவரும், ஞானசூரியனும் ஆன ஸத்குரு ஸத்ய ஸாயியை நான் வணங்குகிறேன்.

ஈஸ்வராம்பா ப்ரிய ஸுதம் ஈப்ஸிதார்த்த ப்ரதாயகம்
ஈஸ்வரம் ஸர்வ லோகானாம் ஸாயிம் வந்தே ஜகத்குரும்


ஈஸ்வராம்பாவின் அன்பு மகனும், விரும்பும் பொருட்களை அருளுபவனும், எல்லா உலகங்களுக்கும் இறைவனும் ஆன ஜகத்குரு ஸாயியை வணங்குகிறேன்.

ஓம் ஸாயீஷ்வராய வித்மஹே
ஸத்யதேவாய தீமஹி
தன்ன: சர்வ ப்ரசோதயாத்


ஓம் ஸாயீஷ்வரனை அறிகிறேன்!
ஸத்யதேவனை தியானிக்கிறேன்!
அதில் எல்லாமும் ஆனவன் என்னை ஈடுபடுத்தட்டும்!

ஓம் ஸாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்


ஓம் ஸாயிராமனை அறிகிறேன்!
ஆத்மாராமனை தியானிக்கிறேன்!
அதில் பாபா என்னை ஈடுபடுத்தட்டும்!

Friday, March 4, 2011

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்


கஜானனம் பூத கணாதி சேவிதம் என்று தொடங்கும் விநாயகர் சுலோகம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஷடானனம் என்று தொடங்கும் முருகன் சுலோகம் ஒன்றை இன்று தான் இணையத்தில் படித்தேன். இதுவும் எளிமையாக இருக்கவே 'சின்ன சின்ன சுலோகங்கள்' வகையில் இங்கே எழுதுகிறேன்.

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸுரஸைன்ய நாதம்
குஹாம் சதாஹம் சரணம் ப்ரபத்யே

ஷடானனம் - ஆறுமுகங்களை உடையவன்

குங்கும ரக்த வர்ணம் - குங்குமத்தைப் போல் மிகச் சிவந்த நிறம் கொண்டவன்; சேயோன்; சேந்தன்

மஹாமதிம் - பேரறிஞன்

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீகமான மயிலை வாகனமாகக் கொண்டவன்

ருத்ரஸ்ய ஸுனும் - உருத்திரனின் திருமகன்

ஸுரஸைன்ய நாதம் - தேவர் படைகளின் தலைவன்

குஹாம் - குகையில் வாழ்பவன்

சதா அஹம் சரணம் ப்ரபத்யே - (அவனை) எப்போதும் நான் கதியென அடைகிறேன்!

குருகுஹனைத் தியானிக்க ஒரு அருமையான சுலோகம்! எளிமையானதும் கூட!

Saturday, October 9, 2010

வந்தே பிருந்தாவனசரம்


யாதவாத்புதயம்! கண்ணனின் திருக்கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு வடமொழிக் காவியம்! வேதாந்த தேசிகன் என்னும் வைணவ ஆசாரியர் இயற்றியது! இதன் முதல் சுலோகம் இந்த சுலோகம். மிக அழகான சுலோகம்.

வந்தே பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்


கண்ணன் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றைச் சொல்லி முதல் வரியைத் துவங்குகிறார் ஆசாரியர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு! அந்த அன்பே வடிவமாக ஆயர்பாடியில் திரிந்தவர் கோபியர்களும் கோபர்களும். அந்த அன்பெல்லாம் பெற்று அன்பின் இமயமாய் திகழ்ந்தான் கண்ணன்!

பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்! பிருந்தாவனத்தில் வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்!

அடுத்த வரியில் ஆசாரியரின் மொழி விளையாட்டு தொடங்குகிறது. ஜயந்தீ என்று ஒரு பொருளிலும் வைஜயந்தீ என்று வேறொரு பொருளிலும் சொல் அமைய அடுத்த வரியைப் பாடியிருக்கிறார்.

சஹஸ்ரநாமம் என்றால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம் தான். அது போல் ஜயந்தி என்றால் அது கிருஷ்ண ஜயந்தி தான்! வேறு எத்தனையோ ஜயந்திகள் இருந்தாலும் ஜயந்தி என்ற சொல் கிருஷ்ண ஜயந்திக்கே விதப்பான (சிறப்பான) ஒன்று.

ஜயந்தீ ஸம்பவம்! குமாரஸம்பவம் என்று சிவகுமாரனின் பிறப்பைக் கூறும் காவியத்தைப் படைத்தானே காளிதாசன்! அங்கே வரும் அதே பொருளில் தான் இங்கேயும் ஸம்பவம் என்ற சொல் அமைகிறது! கிருஷ்ண ஜயந்தியில் பிறந்தவன் கண்ணன்!

தாம வைஜயந்தீ விபூஷணம்! மாலைகளில் எல்லாம் சிறந்த மாலை காட்டுப்பூக்களால் ஆன பல வண்ணப் பூக்கள் நிறைந்த மணமுள்ள மலர்கள் சிலவும் மணமில்லா மலர்கள் சிலவும் ஆன வைஜயந்தீ என்னும் மலர் மாலை!

காட்டில் இந்த யாதவன் கன்றுகள் மேய்க்கச் செல்லும் போது அங்கு மலர்ந்திருக்கும் பலவண்ண மலர்களைக் கொய்து மாலையாக்கி அணிந்து கொள்வானாம். அப்படிப்பட்ட வைஜயந்தீ மாலையை மிக அழகான அணிகலனாக அணிந்து கொண்டிருக்கும் எளிமையானவன் எங்கள் கண்ணன்!

அந்த முழுமுதற்பொருளை நீர்மையின் தீரத்தை 'வந்தே' என்று பலமுறை போற்றி வணங்குவோம்!

Tuesday, September 21, 2010

இராமாயணம் ஒரே சுலோகத்தில்...


கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரே சுலோகத்தில் அமைந்த பாகவதத்தைப் பார்த்தோம் சென்ற இடுகையில். இந்த இடுகையில் ஒரே சுலோகத்தில் அமைந்த இராமாயணத்தைப் பார்க்கப் போகிறோம்.

ஆதௌ ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்

ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்

வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்

ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்

சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்

வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்

சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்

லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்

பஸ்சாத் - பின்னர்

ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்

ஏததி ராமாயணம் - இவையே இராமாயணம்!


இராமனைப் பணி மனமே!

Wednesday, September 1, 2010

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்

இன்று கண்ணனின் பிறந்த நாள்! கோகுலாஷ்டமி! கிருஷ்ண ஜெயந்தி! ஜன்மாஷ்டமி! கண்ணனின் லீலைகளைக் கூறும் புராணம் பாகவத புராணம்! வேதங்கள் அனைத்தையும் நான்காகப் பகுத்த பின்னரும், அவற்றின் உட்பொருளை சூத்திர வடிவில் பிரம்ம சூத்திரமாக எழுதிய பின்னரும், உபவேதமான ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை எழுதிய பின்னரும் முழு மன நிறைவும் பெறாத வியாஸ பகவான் நாரத மகரிஷியின் அறிவுரைக்கிணங்க இயற்றியதே கிருஷ்ண லீலாம்ருதமாகிய ச்ரிமத் பாகவதம்!

பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இருக்கிறது. அது தான் இது!

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
கோவர்த்தனோத்தாரணம்
கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
குந்தீ ஸுதா பாலனம்
ஏதத் பாகவதம் புராண கதிதம்
ச்ரி க்ருஷ்ண லீலாம்ருதம்


ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம் - முன்னொரு காலத்தில் தேவகி தேவியின் திருக்கர்ப்பத்தில் உதித்தான்!

கோபீ க்ருஹே வர்த்தனம் - யசோதா பிராட்டியாகிய கோபியின் வீட்டில் வளர்ந்தான்!

மாயா பூதன ஜீவிதாபஹரணம் - மாயையுடன் வந்த பூதனையின் உயிரைக் கவர்ந்தான்!

கோவர்த்தனோத்தாரணம் - கோவர்த்தன மலையைத் தூக்கினான்!

கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம் - கம்சனை அழித்து கௌரவர் முதலானவர்களை ஒழித்தான்!

குந்தீ ஸுதா பாலனம் - குந்தியின் மைந்தர்களான பாண்டவர்களைக் காத்தான்!

ஏதத் பாகவதம் புராண கதிதம் - இதுவே புராணங்களில் சிறந்ததான பாகவதம்!

ச்ரி க்ருஷ்ண லீலாம்ருதம் - ச்ரி கிருஷ்ணனின் லீலைகள் என்னும் அமுதம்!

குணானுபவத்தில் ஈடுபடும் அடியார்கள் எண்ணி எண்ணி இன்புறத் தக்க வகையில் கண்ணனின் லீலைகளைக் கூறும் வரிகள் ஒவ்வொரு வரியும்! கூடியிருந்து குளிர வேண்டும்!

Saturday, July 17, 2010

சரஸ்வதி நமஸ்துப்யம்...


சிறு குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கும் சுலோகங்களில் சுக்லாம்பரதரம் சுலோகத்திற்கு அடுத்த சுலோகம் இது தான் என்று நினைக்கிறேன். அந்த வயதில் படிப்பு தானே மிக முக்கியம். அதனால் கலைவாணியை வேண்டும் இந்த சுலோகத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

ரொம்ப எளிமையான சுலோகம். ஒவ்வொரு சொல்லாகப் படித்துக் கொண்டு வந்தாலே பொருள் புரிந்துவிடும்.

சரஸ்வதி - தேவி சரஸ்வதி!

நம: துப்யம் = நமஸ்துப்யம் - உனக்கு நமஸ்காரங்கள்.

வரதே - வரம் தருபவளே!

காமரூபிணி - வேண்டியவற்றைத் தருபவளே!

வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் - கல்வித் தொடக்கத்தை

கரிஷ்யாமி - செய்கிறேன்

சித்தி: பவது மே சதா - அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

வேண்டுபவற்றை எல்லாம் தரும் வரமான கல்வியைத் தொடங்கும் போது அது நன்கு சித்தியாக அன்னை சரஸ்வதியை வேண்டுவது தானே முறை!

Friday, July 2, 2010

கற்பூரம் போன்ற நிறத்தை உடையவன்!


கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சார சாரம் புஜகேந்த்ர ஹாரம்
சதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே
பவம் பவானி சஹிதம் நமாமி!


இன்று தான் முதன்முதலாக இந்த சுலோகத்தைப் படித்தேன். மிகவும் எளிமையான சுலோகம். அற்புதமாக இருக்கிறது.

கற்பூர கௌரம் - கற்பூரம் போன்ற நீறு பூத்த வெண்மையான நிறத்தை உடையவன்!

கருண அவதாரம் - கருணையே வடிவெடுத்தவன்

சம்சார சாரம் - இந்த உலகங்களுக்கெல்லாம் அடிப்படையானவன்

புஜகேந்த்ர ஹாரம் - பாம்புகளின் தலைவனை மாலையாக அணிந்தவன்

சதா வஸந்தம் ஹ்ருதய அரவிந்தே - மனத்தாமரையில் என்றும் வசிப்பவன்

பவம் - உலகம், உயிர் அனைத்திற்கும் காரணன்

பவானி சஹிதம் - என்றும் அம்பிகையைப் பிரியாதவன்

நமாமி - வணங்குகிறேன்.

கற்பூரத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவனை, கருணையே வடிவானவனை, உலகங்களுக்கெல்லாம் சாரமானவனை, பாம்பரசனை அணிந்தவனை, மனத்தாமரையில் என்றும் வசிப்பவனை, உலகங்களுக்கெல்லாம் காரணனை, அம்பிகை நாதனை அடியேன் வணங்குகிறேன்!

ஓம் நம:சிவாய!

Saturday, June 26, 2010

விளாம்பழமும் நாவற்பழமும்...





கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்


இந்த சுலோகத்தையும் நாம் நிறைய முறை சொல்லியிருக்கிறோம். எனக்கும் பொருள் புரிந்தும் புரியாமலும் தான் சொல்லியிருக்கிறேன். இன்று பொருள் எழுதலாம் என்று உட்கார்ந்தால் கபித்த என்றால் என்ன என்று தெரியவில்லை. உடனே இணைய சமஸ்கிருத அகராதியில் தேடிக் கண்டுபிடித்தேன். அது ஆங்கிலத்தில் Wood-apple என்று பொருள் போட்டிருந்தது. அது என்ன என்று தெரியவில்லை. உடனே கூகிளாண்டவரிடம் அதன் படத்தைக் காட்டு என்று கேட்டால் விளாம்பழத்தைக் காட்டுகிறார். அடடா, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் இந்தப் பழத்தைக் கொண்டு வந்து அப்படியே அவருக்குப் படைத்துவிட்டு நாம் சாப்பிடுவதற்கு முன்னர் மட்டும் சர்க்கரை கலந்து உண்போமே அந்தப் பழம் தான் கபித்த பழமா என்று தோன்றியது.

மற்றபடி இந்த சுலோகம் மிகவும் எளிமையான சுலோகம் தான்.

கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்

பூத
கண ஆதி சேவிதம் - பூத கணங்கள் முதற்கொண்டு அனைவராலும் வணங்கப்படுபவன்.

கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்.

உமா சுதம் - உமையின் மகன்.

சோக விநாச காரணம் - கவலைகள் தீர்வதற்கான காரணன்.

விக்னேஷ்வர - தடைகளுக்குத் தலைவன்.

பாத பங்கஜம் நமாமி - திருவடி தாமரைகளுக்கு போற்றி!

யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்!

இனி மேல் இந்த சுலோகத்தின் பொருள் மறக்காது என்று நம்புகிறேன்!

Thursday, June 17, 2010

கந்தனுக்கு மூத்தவன் கணேசன்!



ஸுமுகசைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ


ஐந்து கரத்தானின் பதினாறு திருநாமங்களைக் கூறும் சுலோகம் இது. இதனை நாமாவளியாகச் சொல்லும் போது

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூம்ரகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:


என்று சொல்லிப் போற்றுவோம்.

சுலோகத்தைப் பொருளுக்காகப் பிரித்தால்

ஸுமுக ச ஏகதந்த ச கபில: கஜகர்ணக
லம்போதர ச விகட: விக்னராஜ: விநாயக:
தூமகேது: கணாத்யக்ஷ பாலசந்த்ர: கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ


என்று அமையும்.

ஸுமுக (sumukha) - அழகான, ஆனந்தமான, அன்பான திருமுகத்தை உடையவன்
ஏகதந்த (Ekadhantha)- ஒற்றைக் கொம்பன்
கபில (kapila) - சிவந்த, மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தை உடையவன்
கஜகர்ணக (ghajakarNaka) - யானைக்காதன்
லம்போதர (lambOdhara)- பெரும்வயிற்றன்
விகட: (vikata) - ஆனந்தத்தைத் தருபவன்
விக்னராஜ: (vignaraaja) - தடைகளுக்கு அரசன்
விநாயக: (vinaayaka) - தனக்கு மிக்கவர் இல்லாதவன்
தூமகேது: (duumakEtu)- தடைகளைக் குறிப்பால் உணர்த்துபவன்
கணாத்யக்ஷ: (ganaathyaksha) - பிரபஞ்ச சக்திகளின் முதல்வன் (கணங்களின் முதல்வன் - கணபதி)
பாலசந்த்ர (paalachandra) - நிலவைப் போன்ற நெற்றியை உடையவன்
கஜானன (gajaanana) - யானைமுகன்
வக்ரதுண்ட (vakrathunda) - வளைந்த துதிக்கையன்
சூர்ப்பகர்ண (suurpakarNa) - முறக்காதன்
ஹேரம்ப (hEramba) - அம்பிகையின் அன்பிற்குரிய மகன்
ஸ்கந்தபூர்வஜ (skandhapuurvaja) - கந்தனுக்கு மூத்தவன்

இப்பதினாறு திருநாமங்களைச் சொல்லி வணங்க ஆனைமுகன் பிரசன்ன வதனனாய் மிக்க மகிழ்ந்து அருள் புரிவான்!

***

இந்த எழுத்துப்பதிவை ஒலிப்பதிவாக்கித் தந்த சுப்புரத்தினம் ஐயாவிற்கு மிக்க நன்றி.

Monday, June 14, 2010

அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்


அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
- இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

ஜெய் ஹனுமான் ஞான குண சாகர!

Thursday, July 24, 2008

ஊமை பேசுவதும் முடவர் மலையைக் கடப்பதும்...


எவ்வளவு தான் தன்னம்பிக்கை இருந்தாலும் சில நேரங்களில் சில செயல்களைச் செய்ய முனையும் போது ஒரு மெல்லிய நடுக்கம் ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது; அடியேனுக்கு அந்த நிலை பலமுறை ஏற்பட்டுள்ளது. இறை நம்பிக்கையே தன்னம்பிக்கை என்ற கருத்தில் உறுதியாக இருக்க எனக்கு சில துதிப்பாடல்கள் துணையாக அமைகின்றது. அப்படி மெல்லிய நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் உதவும் துதிகளில் ஒன்று இந்த சுலோகம்.

ஊமையைப் பேச வைத்து பெரும்கவியாக்கிய கதைகளைப் படித்திருக்கிறோம். குள்ள முனிவன் அடக்க இயலாத விந்திய மலையைக் கடந்ததைப் பற்றி படித்திருக்கிறோம். அப்படி செயற்கரிய செயல்களை எல்லாம் அவர்கள் யாருடைய கருணையால் செய்தார்களோ அந்த இறைசக்தியே எனக்கும் துணை புரிகிறது; கருணை புரிகிறது என்ற எண்ணம் அளவில்லாத தன்னம்பிக்கையைத் தருகிறது.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்


மூகம் கரோதி வாசாலம் - ஊமை பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவதும்

பங்கும் லங்கயதே கிரிம் - முடவர் பெரும் மலையை கடப்பதும்

யத் க்ருபா தம் அஹம் வந்தே - யார் கருணையால் நடக்கிறதோ அவரை நான் வணங்குகிறேன்


பரமானந்த மாதவம் - அவர் பரமானந்தரும் மாதவரும் ஆனவர்

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.

Wednesday, June 18, 2008

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்....



சபரிமலை செல்லும் அன்பர்கள் பலருக்கும் பாடமான ஸ்லோகம் தான் இது. யார் எழுதியது என்று தெரியவில்லை. பலருக்கும் இஷ்ட தெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திருவடி பணிந்து இங்கு இதனை இடுகிறேன்.


லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.

Sunday, June 8, 2008

ஸ்ரீ சாரதைக்கு வணக்கம்...




கல்விக்கு அதிபதி என்று சரஸ்வதியை வணங்குவது வழக்கம். சிருங்க-கிரி என்று போற்றப்படும் சிருங்கேரியில் கோலோச்சும் சாரதாம்பாள் சரஸ்வதியே என்பது சங்கரவிஜயம் மூலம் தெரியவருகிறது. அவளை வணங்கிடும் ஒரு சிரு ஸ்லோகம்.

ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்
பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்
துங்கா நதீதீர விஹார சக்தாம்
ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.

சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.

Tuesday, April 8, 2008

ஷடானனம் ப்ரஹ்மண்ய தேவம்...


ஷடானனம் சந்தன லிபித காத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸூனும் சுரலோக நாதம்
ப்ரம்ஹண்ய தேவம் சரணம் ப்ரபத்யே


shadAnanam chandana libitha ghAthram
mahOrasam dhivya mayuura vAhanam
rudhrasya suunum suralOka nAtham
brahmanya dEvam saranam prabhathyE

அண்ணனை வணங்கியபிறகு தம்பியை வணங்குவது தானே முறை. அதற்குப் பின்னர் யாரை வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாம். அதனால் தான் ஆனைமுகனை வணங்கிவிட்டு இப்போது ஆறுமுகனை வணங்குகிறோம்.

ஷடானனம் - ஷட் + ஆனனம் - ஆறு முகங்கள் கொண்டவரும்

சந்தன லிபித காத்ரம் - சந்தனம் பூசிய திருமேனியைக் கொண்டவரும்

மஹோரசம் - பெரும் இரசிகரும் (கலைகளை எல்லாம் இரசிப்பவரும் வளர்ப்பவரும் அருள்பவரும்)

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீக மயில் வாகனம் கொண்டவரும்

ருத்ரஸ்ய ஸூனும் - ருத்ரனாகிய சிவபெருமானின் திருமகனும்

சுரலோக நாதம் - தேவலோகத்தின் தலைவனும் (தேவசேனாபதியும்)

ப்ரம்ஹண்ய தேவம் - பரம்பொருள் ஆனவரும் ஆன சுப்ரமண்ய தேவரின்

சரணம் ப்ரபத்யே - திருவடிகளைத் தஞ்சமடைகிறேன்

எடுத்தவுடனேயே திருமுருகனின் தனிச்சிறப்பான ஆறுமுகங்களைக் கூறுகிறது இந்த சுலோகம். ஆனைமுகனை கஜானனம் என்றும் ஐந்துமுகனான சிவபெருமானை பஞ்சானனம் என்றும் நான்முகனைச் சதுரானனம் என்றும் சொல்லிக் கேட்டிருப்போம். அவற்றை நினைவில் கொண்டால் ஷட் + ஆனனம் என்ற இந்தச் சொல்லையும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.

இன்றைக்கும் ஆறுமுகனடியார்கள் காவடி எடுக்கும் போதும் முடிகாணிக்கை செலுத்திய பின்னரும் தங்கள் மேனிகளில் சந்தனம் பூசிக் கொள்கிறார்கள். சேந்தனின் திருமேனியிலும் அதே சந்தனம் இருக்கின்றது போலும். அதனால் அதனை அடுத்தாகச் சொல்கிறது சுலோகம். ஷடானனம் சந்தன லிபித காத்ரம். நோயற்ற உடலைக் கொண்டவர்களை திடகாத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்வார்களே - அதனை நினைவில் கொண்டால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் காத்ரம் என்ற சொல்லின் பொருள் மனத்தில் நிற்கும். லிபி என்றால் எழுத்து என்று பலருக்கும் தெரிந்திருக்கும். சந்தனம் எழுதிய திருமேனி என்பதற்கு இங்கே லிபித காத்ரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கலைகளை அருள்பவனும் அவற்றைக் காப்பவனும் ஆன திருமுருகன் மஹா ரசிகனாகவும் இருக்கத் தானே வேண்டும். அதனால் அவனை மஹோரசம் என்று போற்றுகிறது இந்த சுலோகம்.

கலைகளைச் சொன்னவுடனே நாதத்தையும் விந்துவையும் சொல்ல வேண்டுமே? நாத தத்துவமான மயிலை வாகனமாகக் கொண்டவன் என்று உடனே போற்றுகிறது இந்த சுலோகம்.

ருத்திரனின் நெற்றிக்கண்களிலிருந்து தோன்றிய திருமுருகனை திருக்குமரன் என்று அழைக்கும் விதமான ருத்ரஸ்ய ஸூனும் என்கிறது அடுத்த வரி.

தேவர்களின் படைகளுக்குத் தளபதியான தேவசேனாபதியே தேவலோகத்தைக் காத்து அருள்பவன் என்பதால் தேவலோகத்தின் தலைவன் என்கிறது அடுத்த பதம். தேவசேனாபதி என்பது இரண்டு விதமாகப் பிரிந்து அழகான பொருளைத் தருவதைக் காணலாம். தேவசேனாவின் பதி என்று ஒரு பொருளும் தேவர்களின் சேனாபதி என்று ஒரு பொருளும் அமைவது அழகு.

இப்படியெல்லாம் போற்றப்படும் சுப்ரமண்ய தேவரை அடியேன் தஞ்சமாக அடைகிறேன் என்று இறுதியில் சரணாகதி செய்யப்படுகிறது. தஞ்சம் அவனன்றிப் பிறிதில்லை.

Wednesday, April 2, 2008

சுக்லாம்பரதரம் விஷ்ணும்...

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே


suklaambharadharam vishnum sasivarnam chathurpujam
prasannavathanam dhyAyEth sarva viknObha saanthayE

கொஞ்சமேனும் இறை நம்பிக்கை உடையவர்களில் பெரும்பாலோனோருக்கு இந்த சுலோகம் தெரிந்திருக்கும். குறைந்தது கேட்டாவது இருப்பார்கள். வடமொழியில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இந்த சுலோகத்தைச் சொல்லியே தொடங்குகின்றன. பொதுவாக இந்தச் சுலோகம் விநாயகரை வணங்கும் சுலோகமாகக் கருதப்படுகின்றது.

சுக்லாம் பரதரம் என்று இந்த சுலோகத்தின் தொடக்கத்தில் இருக்கும் சொற்றொடரை இரு சொற்களாகப் பிரித்து உச்சரிப்பது பொருளினை உணர்வதற்குத் தடையாக அமைகிறதோ என்றொரு எண்ணம் உண்டு. சுக்ல அம்பர தரம் என்ற மூன்று சொற்களின் கூட்டுச் சொல் சுக்லாம்பரதரம் என்பது. சுக்லாம் என்பதற்கும் பரதரம் என்பதற்கும் இடையில் இடைவெளி விடாமல் பலுக்கினால் (உச்சரித்தால்) பொருள் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

இந்த சுலோகம் விஷ்ணுவிற்கான சுலோகம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. விஷ்ணும் என்றும் ப்ரசன்ன வதனம் என்றும் இருப்பதால் யானை முகனான கணேசனுக்கு உரிய சுலோகம் இல்லை இது என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால் இந்த சுலோகத்தில் எப்படி கணேசனுக்குப் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதே போல் விஷ்ணுவிற்கும் பொருந்தாதது என்று சொல்லத் தக்க சில சொற்களும் இருக்கின்றன. இங்கே இந்த சுலோகத்திற்கு இரண்டு வகையிலும் பொருள் தருகிறேன். எது பொருத்தம் என்று தோன்றுகிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

விநாயகர்:



சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

விஷ்ணு:


சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் பெருமாள் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர் (பெரும்பாலும் நீல நிறம் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் வ்யூஹ அவதாரங்களில் ஒரு உருவம் சந்திர நிறம் கொண்டவர்)
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

Tuesday, April 1, 2008

ஸ்தோத்ரமாலா - முதல் வணக்கம்



பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக இருந்து வரும் ஆசை இது. வடமொழிப் பனுவல்களுக்காக ஒரு தனிப்பதிவு தொடங்கி இயன்ற போதெல்லாம் வடமொழிப் பனுவல்களுக்குப் பொருள் சொல்ல வேண்டும் என்று. ஆனைமுகனை வணங்கி இன்று தொடங்கிவிட்டேன். இனி அவன் செயல்.

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாசக பாத நமஸ்தே


muushika vaakana mOthaka hastha
saamara karna vilambitha suuthra
vaamana ruupa mahEsvara puthra
vigna vinaasaka paatha namasthE


மூஷிக வாகன - மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும்

மோதக ஹஸ்த - கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும்

சாமர கர்ண - விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும்

விளம்பித சூத்ர - கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும்

வாமன ரூப - குறுகிய உருவை உடையவரும்

மஹேஸ்வர புத்ர - மஹேஸ்வரனாம் சிவபெருமானின் திருமகனும் ஆன

விக்ன விநாசக - தடைகளை நீக்கும் விநாயகரின்

பாத நமஸ்தே - திருப்பாதங்களை வணங்குகிறேன்.

***

மிக எளிமையான சுலோகம் இது. பலருக்கும் தெரிந்தது. இனிப் பொருளுடன் இந்த சுலோகத்தைச் சொல்லி வணங்கலாம்.