Showing posts with label Murugan. Show all posts
Showing posts with label Murugan. Show all posts

Friday, March 4, 2011

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்


கஜானனம் பூத கணாதி சேவிதம் என்று தொடங்கும் விநாயகர் சுலோகம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஷடானனம் என்று தொடங்கும் முருகன் சுலோகம் ஒன்றை இன்று தான் இணையத்தில் படித்தேன். இதுவும் எளிமையாக இருக்கவே 'சின்ன சின்ன சுலோகங்கள்' வகையில் இங்கே எழுதுகிறேன்.

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸுரஸைன்ய நாதம்
குஹாம் சதாஹம் சரணம் ப்ரபத்யே

ஷடானனம் - ஆறுமுகங்களை உடையவன்

குங்கும ரக்த வர்ணம் - குங்குமத்தைப் போல் மிகச் சிவந்த நிறம் கொண்டவன்; சேயோன்; சேந்தன்

மஹாமதிம் - பேரறிஞன்

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீகமான மயிலை வாகனமாகக் கொண்டவன்

ருத்ரஸ்ய ஸுனும் - உருத்திரனின் திருமகன்

ஸுரஸைன்ய நாதம் - தேவர் படைகளின் தலைவன்

குஹாம் - குகையில் வாழ்பவன்

சதா அஹம் சரணம் ப்ரபத்யே - (அவனை) எப்போதும் நான் கதியென அடைகிறேன்!

குருகுஹனைத் தியானிக்க ஒரு அருமையான சுலோகம்! எளிமையானதும் கூட!

Thursday, July 3, 2008

ஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம்....


முருகனருள் வலைப்பூ 100ஆம் பதிவினை நோக்கிச் செல்லும் விட்ஜெடைப் பார்த்த போது, இதை எழுதத் தோன்றியது. இந்தப் பதிவினை இரண்டு நாட்கள் முன்பே போட்டிருக்க வேண்டும். எழுத நேரம் கிடைக்கவில்லை. முருகனருள் வலைப்பூவில் பதிவிடும் நண்பர்கள் எல்லோருக்கும் முருகனருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மஹா மந்திரம் என்று ஒன்று இருக்கும். அதில் முருகனுக்கானது ஷட்-அக்ஷரங்களால் ஆன 'சரவணபவ'. ஆறுமுகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. நமக்கு மொழிப் பேதமிருந்தாலும் நம் கந்தனுக்கு எல்லா மொழியும் தம்மொழிதானே!!!


அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
ரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான, தாங்களை சரணடையூம் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
தீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்ய: வல்லீந்த்ராணி ஸுதாபதே!
ரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
வவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன். எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோ! ஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
வத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்குகின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்க வேண்டும்.

ஸுதான்யம் யச: கீர்திம் அவிச்சேதம் ச ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம், தான்யம், அளவற்ற புகழ், மகன்-பேரன் என்று வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து, செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
ய: படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பத: சிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும் மேலாக செல்வங்கள் கிடைக்கும்.

Tuesday, April 8, 2008

ஷடானனம் ப்ரஹ்மண்ய தேவம்...


ஷடானனம் சந்தன லிபித காத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸூனும் சுரலோக நாதம்
ப்ரம்ஹண்ய தேவம் சரணம் ப்ரபத்யே


shadAnanam chandana libitha ghAthram
mahOrasam dhivya mayuura vAhanam
rudhrasya suunum suralOka nAtham
brahmanya dEvam saranam prabhathyE

அண்ணனை வணங்கியபிறகு தம்பியை வணங்குவது தானே முறை. அதற்குப் பின்னர் யாரை வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாம். அதனால் தான் ஆனைமுகனை வணங்கிவிட்டு இப்போது ஆறுமுகனை வணங்குகிறோம்.

ஷடானனம் - ஷட் + ஆனனம் - ஆறு முகங்கள் கொண்டவரும்

சந்தன லிபித காத்ரம் - சந்தனம் பூசிய திருமேனியைக் கொண்டவரும்

மஹோரசம் - பெரும் இரசிகரும் (கலைகளை எல்லாம் இரசிப்பவரும் வளர்ப்பவரும் அருள்பவரும்)

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீக மயில் வாகனம் கொண்டவரும்

ருத்ரஸ்ய ஸூனும் - ருத்ரனாகிய சிவபெருமானின் திருமகனும்

சுரலோக நாதம் - தேவலோகத்தின் தலைவனும் (தேவசேனாபதியும்)

ப்ரம்ஹண்ய தேவம் - பரம்பொருள் ஆனவரும் ஆன சுப்ரமண்ய தேவரின்

சரணம் ப்ரபத்யே - திருவடிகளைத் தஞ்சமடைகிறேன்

எடுத்தவுடனேயே திருமுருகனின் தனிச்சிறப்பான ஆறுமுகங்களைக் கூறுகிறது இந்த சுலோகம். ஆனைமுகனை கஜானனம் என்றும் ஐந்துமுகனான சிவபெருமானை பஞ்சானனம் என்றும் நான்முகனைச் சதுரானனம் என்றும் சொல்லிக் கேட்டிருப்போம். அவற்றை நினைவில் கொண்டால் ஷட் + ஆனனம் என்ற இந்தச் சொல்லையும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.

இன்றைக்கும் ஆறுமுகனடியார்கள் காவடி எடுக்கும் போதும் முடிகாணிக்கை செலுத்திய பின்னரும் தங்கள் மேனிகளில் சந்தனம் பூசிக் கொள்கிறார்கள். சேந்தனின் திருமேனியிலும் அதே சந்தனம் இருக்கின்றது போலும். அதனால் அதனை அடுத்தாகச் சொல்கிறது சுலோகம். ஷடானனம் சந்தன லிபித காத்ரம். நோயற்ற உடலைக் கொண்டவர்களை திடகாத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்வார்களே - அதனை நினைவில் கொண்டால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் காத்ரம் என்ற சொல்லின் பொருள் மனத்தில் நிற்கும். லிபி என்றால் எழுத்து என்று பலருக்கும் தெரிந்திருக்கும். சந்தனம் எழுதிய திருமேனி என்பதற்கு இங்கே லிபித காத்ரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கலைகளை அருள்பவனும் அவற்றைக் காப்பவனும் ஆன திருமுருகன் மஹா ரசிகனாகவும் இருக்கத் தானே வேண்டும். அதனால் அவனை மஹோரசம் என்று போற்றுகிறது இந்த சுலோகம்.

கலைகளைச் சொன்னவுடனே நாதத்தையும் விந்துவையும் சொல்ல வேண்டுமே? நாத தத்துவமான மயிலை வாகனமாகக் கொண்டவன் என்று உடனே போற்றுகிறது இந்த சுலோகம்.

ருத்திரனின் நெற்றிக்கண்களிலிருந்து தோன்றிய திருமுருகனை திருக்குமரன் என்று அழைக்கும் விதமான ருத்ரஸ்ய ஸூனும் என்கிறது அடுத்த வரி.

தேவர்களின் படைகளுக்குத் தளபதியான தேவசேனாபதியே தேவலோகத்தைக் காத்து அருள்பவன் என்பதால் தேவலோகத்தின் தலைவன் என்கிறது அடுத்த பதம். தேவசேனாபதி என்பது இரண்டு விதமாகப் பிரிந்து அழகான பொருளைத் தருவதைக் காணலாம். தேவசேனாவின் பதி என்று ஒரு பொருளும் தேவர்களின் சேனாபதி என்று ஒரு பொருளும் அமைவது அழகு.

இப்படியெல்லாம் போற்றப்படும் சுப்ரமண்ய தேவரை அடியேன் தஞ்சமாக அடைகிறேன் என்று இறுதியில் சரணாகதி செய்யப்படுகிறது. தஞ்சம் அவனன்றிப் பிறிதில்லை.