Wednesday, June 25, 2008

சண்டை எதற்கு? பின் சமாதானம் எதற்கு? (பஜ கோவிந்தம் 25)


சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குரு யத்னம் விக்ரஹசந்தௌ
பவ சமசித்த: சர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத் யாதி விஷ்ணுத்வம்

சத்ரௌ - எதிரிகளிடமோ

மித்ரே - நண்பர்களிடமோ

புத்ரே - பிள்ளைகளிடமோ

பந்தௌ - உறவினர்களிடமோ (யாரிடம் ஆனாலும் அவர்களுடன்)

மா குரு யத்னம் விக்ரஹ சந்தௌ - சண்டைக்கோ சமாதானத்திற்கோ முயற்சி செய்யவேண்டாம்

பவ சமசித்த: சர்வத்ர த்வம் - எல்லாரிடமும் எல்லா நேரமும் எங்கும் சமமான மனத்துடன் இரு

வாஞ்சஸ்ய அசிராத் யாதி விஷ்ணுத்வம் - இறைநிலையை விரைவில் அடைந்துவிடுவாய்

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, June 21, 2008

உன்னிலும் என்னிலும் எல்லோரிடத்தும் ஒரே இறைவன் (பஜ கோவிந்தம் 24)


த்வயி மயி சான்யத்ரய்கோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மா ஸஹிஷ்ணு:
சர்வஸ்மிந் அபி பஸ்யாத்மானம்
சர்வத்ரோ ஸ்த்ருஜ பேதஜ்ஞானம்


த்வயி - உன்னிலும்

மயி - என்னிலும்

ச அன்யத்ர - மற்றுமுள்ள எல்லாரிடத்திலும், எல்லாப் பொருளிலும்

ஏகோ விஷ்ணு: - ஒரே இறைவன் விஷ்ணு தான் இருக்கிறார்.

பேத அஞ்ஞானம் - வேறுபாடுகள் தோன்றுவது அறியாமையால்

வ்யர்த்தம் - அது வீண்

குப்யஸி மா - என் மேல் வீணாகக் கோபம் கொள்ளாதே

ஸஹிஷ்ணு: - பொறுமையாக இரு

சர்வஸ்மிந் அபி - எங்கும் எப்பொருளிலும் எவ்வுயிரிலும்

பஸ்யதி ஆத்மானம் - ஆத்மனைப் பார்

சர்வத்ரோ ஸ்த்ருஜ - எல்லா இடங்களிலும் வேறுபாடுகளைக் காண்பதை விட்டுவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 20, 2008

வாழ்வு முற்றும் கனவு (பஜ கோவிந்தம் 23)


கஸ்த்வம் கோஹம் குத ஆயாத:
கா மே ஜனனி கோ மே தாத:
இதி பரிபாவய சர்வம் அசாரம்
விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம்

கஸ்த்வம் (க த்வம்) - நீ யார்?

கோஹம் (க அஹம்) - நான் யார்?

குத ஆயாத: - எங்கிருந்து வந்தோம்?

கா மே ஜனனி - யார் என் தாய்?

கோ மே தாத: - யார் எனது தந்தை?

இதி பரிபாவய - இந்தக் கேள்விகளைக் கேட்டு விடைகளை அறிய முற்படு

சர்வம் அசாரம் - இங்கு எல்லாமே நிலையற்றது

விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம் - இவையெல்லாம் கனவினைப் போன்றது என்பதனை உணர்ந்து எல்லாவற்றையும் துறந்துவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 19, 2008

பித்தனும் குழந்தையும் சித்தனும் (பஜ கோவிந்தம் 22)


ரத்யாகர்பட விரசித கந்தா:
புண்யாபுண்ய விவர்ஜித பந்தா:
யோகி யோக நியோஜித சித்தா:
ரமதே பாலோன்மத்தவத் ஏவ

ரத்யா கர்பட விரசித கந்தா: - கந்தல் துணிகளால் ஆன உடைகளை அணிந்திருப்பான்

புண்ய அபுண்ய விவர்ஜித பந்தா: - புண்ய பாவங்களைத் தாண்டிய நடத்தையை (பாதையை) உடையவனாய் இருப்பான்

யோகி யோக நியோஜித சித்தா: - யோகியாகவும் இறைவனிடம் இணைந்த சித்தத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்

ரமதே பால உன்மத்தவத் ஏவ - அப்படிப்பட்டவனே மகிழ்கிறான்; பார்வைக்குக் குழந்தையைப் போலும் பித்தனைப் போலும் இருப்பான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

யோகம் என்ற சொல்லுக்கு ஐக்கியம் என்ற பொருளும் இருக்கிறது. பிரிந்திருந்த இரு பொருட்கள் ஒன்றாகச் சேர்வது யோகம்.

Wednesday, June 18, 2008

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு மீண்டும் கருவறைத் தங்கல் (பஜ கோவிந்தம் 21)


புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே


புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு

புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு

புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்

இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது

க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முராரி - முரனைக் கொன்றவன்.

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்....



சபரிமலை செல்லும் அன்பர்கள் பலருக்கும் பாடமான ஸ்லோகம் தான் இது. யார் எழுதியது என்று தெரியவில்லை. பலருக்கும் இஷ்ட தெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திருவடி பணிந்து இங்கு இதனை இடுகிறேன்.


லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.

Tuesday, June 17, 2008

கீதை கொஞ்சம் கங்கை கொஞ்சம் கண்ணன் கொஞ்சம் (பஜ கோவிந்தம் 20)


பகவத் கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜல லவ கணிகா பீதா
சக்ருதபி யேன முராரி சமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

பகவத் கீதா கிஞ்சித் அதீதா - பகவத் கீதையை கொஞ்சமாவது படித்து அதன் படி நடந்திருந்தாலோ

கங்கா ஜல லவ கணிகா பீதா - கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பக்தியுடன் பருகியிருந்தாலோ

சக்ருதபி யேன முராரி சமர்ச்சா - முன்னர் எப்போதோ செய்த புண்ணிய வசத்தால் தற்செயலாக ஒருவன் நாராயணனை அர்ச்சித்திருந்தாலோ

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா - அப்படிப்பட்டவன் யமனுடன் வாதிக்க வேண்டிய தேவையின்றி முக்தியை அடைவான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முன்னர் ஒரு பாட்டில் கங்கையில் நீராடினாலும், நோன்புகள் நோற்றாலும், தான தருமங்கள் செய்தாலும் ஞானமில்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் முக்தியடைய மாட்டான் என்று சொன்னவர் இங்கு அதற்கு நேர் எதிராகச் சொல்கிறாரே என்று எண்ணலாம். கொஞ்சம் சிந்தித்தால் என்ன சொல்கிறார் என்பது விளங்கும்.

கங்கையில் நீராடிவிட்டு, நோன்புகள் நோற்றுவிட்டு, தான தருமங்கள் செய்துவிட்டு ஆனால் ஆத்ம ஞானத்தை அடையாமல் இறுமாப்பினை அடைந்தவன் முக்தி அடையமாட்டான்; அங்கே சொல்வது ஞானத்தின் முக்கியத்துவத்தை.

ஆனால் அதே நேரத்தில் கங்கையில் நீராடுவதும் (கங்கை நீரை ஒரு துளி அருந்துவதும்), நோன்புகள் நோற்பதும் (முராரியை வணங்குவதும்), தான தருமங்கள் செய்வதும் (கீதையைப் படித்து அதன் படி நடத்தலும்) முக்திக்கு முதல் படியான ஹ்ருதய சுத்தத்தைக் கொடுக்கும். அந்த இதயத் தூய்மையை அடைந்த பின்னரே ஞானம் தோன்றும். பின்னர் முக்தி கிடைக்கும். அதனால் முதல் படியான இதயத் தூய்மையை அடையும் வழிகளை இங்கே கூறுகிறார். இங்கே சொல்வது இதயத் தூய்மை அடைவதின் முக்கியத்துவத்தை.