Friday, June 24, 2011

அச்யுதாஷ்டகம் - 1


சிறந்த சந்தத்தில் அமைந்திருக்கும் பாடல் இது. ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றியது. மிக எளிமையானது. ஓரிரு சுலோகங்களைத் தவிர.

அஷ்டகம் என்றால் எட்டு சுலோகங்களும் ஒரு பலச்ருதியும் கொண்ட ஸ்தோத்ரம்.

அச்யுதம் என்று தொடங்குவதால் இந்த துதிக்கு அச்யுதாஷ்டகம் என்ற பெயர் அமைந்தது போலும்.

இந்தத் துதியில் வரும் முதல் சுலோகம் இது!



அச்யுதம் கேசவம் ராம நாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே

அச்யுதம் - என்றும் ஒரே நிலையில் இருப்பவன்! தன்னை அண்டியவர்கள் கீழ் நிலையை அடைய விடாதவன்! இவனை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பிறப்பு சுழல் கரும வசத்தால் அமைவதில்லை!

கேசவம் - அழகிய சுருண்ட முடிகளை உடையவன்! கேசி என்னும் அரக்கனை வதைத்தவன்! அரன் அயன் என்று உலகு அழித்து அமைத்து உளனே என்று ஆழ்வார் பாடியதைப் போல் க என்ற பிரம்மனுக்கும் ஈச என்ற ஈசானனுக்கும் அந்தர்யாமி ஆனவன்!

ராம - மகிழ்ச்சியைத் தருபவன்! மகிழ்ச்சியே உருவானவன்! கவர்பவன்!

நாராயணம் - நாரங்கள் என்னும் உயிர்கள், உலகங்கள் அனைத்திற்கும் இருப்பிடமானவன்! நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன்! நாரங்களை நடத்துபவன்! நீர்மையன்! நீரைப் போன்ற தன்மை கொண்டவன்! அடியவர் தரும் உருவங்களை எல்லாம் ஏற்று அதில் நிறைபவன்!

க்ருஷ்ண - கவர்பவன்! களையெடுப்பவன்! கருப்பன்! பண்படுத்துபவன்! கண்ணன்!

தாமோதரம் - அன்பிற்கு வசப்படுபவன்! யசோதையாலும் சகாதேவனாலும் கட்டப்பட்ட கயிற்றைத் தாங்கியவன்!

வாஸுதேவம் - வசுதேவன் மைந்தன்! எங்கும் வசிப்பவன்! ஒளி வடிவானவன்!

ஹரிம் - கவர்பவன்! பொருளைக் கவர்பவன்! உள்ளத்தைக் கவர்பவன்! உயிரைக் கவர்பவன்! திருடன்!

ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தன் மார்பில் தாங்குபவன்! செல்வன்!

மாதவன் - திருமகள் கேள்வன்! திருமால்! பெருந்தவ வடிவானவன்!

கோபிகா வல்லபம் - கோபியர் கொஞ்சும் ரமணன்! கோபியர் உள்ளத்திற்கு நெருங்கியவன்! கோபியர்களின் அந்தரங்கன்!

ஜானகீ நாயகம் - ஜனக குமாரியின் நாயகன்!

ராமசந்த்ரம் - சந்திரனைப் போல் கவர்பவன்!

பஜே - என்றும் துதிக்கிறேன்!

தன் அன்பர்கள் நிலை தாழ விடாதவனும், சுருள்முடி அழகனும், மகிழ்ச்சியைத் தருபவனும், நீர்மையாளனும், கண்ணனும், அன்பிற்கு வசப்படுபவனும், எங்கும் வசிப்பவனும், கவர்பவனும், செல்வனும், திருமகள் கேள்வனும், கோபியர் உள்ளம் நிறைபவனும், சீதை மணாளனும் ஆன ராமசந்திரனை என்றும் பஜிக்கிறேன்!

Friday, April 29, 2011

ஸஹ நாவவது ஸஹனௌ பு3னக்து



வேதங்களை ஓதும் போது தொடக்கத்திலும் இறுதியிலும் சாந்தி பாடம் என்று சில மந்திரங்களை ஓதுவார்கள். அதில் ஸஹ நாவவது என்று தொடங்கும் இந்த சாந்தி பாடம் மிகவும் பிரபலம்.

ஓம் ஸஹ நாவவது ஸஹனௌ பு3னக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்விநாவதீதமஸ்து
மா வித் விஷாவஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி


ஓம்



ஸஹ நாவவது - அது எங்கள் இருவரையும் (அனைவரையும்) காக்கட்டும்



ஸஹனௌ பு3னக்து - அது நாங்கள் இருவரும் (அனைவரும்) விடுதலையின் பேரின்பத்தை அனுபவிக்கும்படி செய்யட்டும்



ஸஹ வீர்யம் கரவாவஹை - சாஸ்திரங்களில் எங்கள் இருவரின் (அனைவரின்) திறமை மேன்மேலும் பெருகட்டும்



தேஜஸ்விநாவதீதமஸ்து - எங்கள் படிப்பு மிகவும் ஒளியுடையதாகட்டும்



மா வித் விஷாவஹை - நாங்கள் யாரிடமும் மனவேறுபாடின்றி இருக்க அருளட்டும்




ஓம் சாந்தி சாந்தி சாந்தி


Thursday, April 28, 2011

ஸத்ய ஸாயி வந்தனம்!


என்னுடைய தினசரி காலை வழிபாட்டில் சொல்லும் இரு சுலோகங்களும் சாயி காயத்ரி மந்திரங்களும்...

ஹ்ருதாகாசே சதா பாந்தம் சாந்தம் ஆனந்த ரூபினம்
ஞானபானும் அஹம் வந்தே ஸத்குரும் ஸத்ய ஸாயினம்


இதய ஆகாயத்தில் என்றும் இருப்பவரும், அமைதியும் மகிழ்ச்சியுமே வடிவானவரும், ஞானசூரியனும் ஆன ஸத்குரு ஸத்ய ஸாயியை நான் வணங்குகிறேன்.

ஈஸ்வராம்பா ப்ரிய ஸுதம் ஈப்ஸிதார்த்த ப்ரதாயகம்
ஈஸ்வரம் ஸர்வ லோகானாம் ஸாயிம் வந்தே ஜகத்குரும்


ஈஸ்வராம்பாவின் அன்பு மகனும், விரும்பும் பொருட்களை அருளுபவனும், எல்லா உலகங்களுக்கும் இறைவனும் ஆன ஜகத்குரு ஸாயியை வணங்குகிறேன்.

ஓம் ஸாயீஷ்வராய வித்மஹே
ஸத்யதேவாய தீமஹி
தன்ன: சர்வ ப்ரசோதயாத்


ஓம் ஸாயீஷ்வரனை அறிகிறேன்!
ஸத்யதேவனை தியானிக்கிறேன்!
அதில் எல்லாமும் ஆனவன் என்னை ஈடுபடுத்தட்டும்!

ஓம் ஸாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்


ஓம் ஸாயிராமனை அறிகிறேன்!
ஆத்மாராமனை தியானிக்கிறேன்!
அதில் பாபா என்னை ஈடுபடுத்தட்டும்!

Sunday, March 13, 2011

மாம் பாது ஸரஸ்வதி பகவதி!



சரஸ்வதி தேவியின் திருவுருவத்தைத் தியானிக்க ஒரு அருமையான சுலோகம் இது!

யா குந்தேந்து துஷார ஹார தவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர தண்ட மண்டித கரா
யா ஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவை: சதா பூஜிதா
சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி
நிச்சேஷ ஜாட்யாபஹா

யா குந்த இந்து துஷார ஹார தவளா
- யார் சந்திரனைப் போலவும் பனியைப் போலவும் வெண்மையான மல்லிகை மாலையை அணிந்து கொண்டிருக்கிறாளோ


யா சுப்ர வஸ்த்ராவ்ருதா - யார் வெண்மையான ஆடையை அணிந்திருக்கிறாளோ



யா வீணா வர தண்ட மண்டித கரா - யார் வீணையை ஏந்திய வரம் தரும் திருக்கைகளை உடையவளோ



யா ஸ்வேத பத்மாஸனா - யார் வெண்தாமரையில் வீற்றிருப்பவளோ


யா ப்ரஹ்ம அச்யுத சங்கர ப்ரப்ருதிபி: தேவை: சதா பூஜிதா - யார் பிரம்மன் அச்சுதன் சங்கரன் முதலிய தேவர்களால் என்றும் வணங்கப்படுபவளோ



சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி நிச்சேஷ ஜாட்யாபஹா - செயலின்மையையும் அறிவின்மையையும் அறவே நீக்கும் அந்த ஸரஸ்வதியென்னும் தாய் என்னை என்றும் காக்கட்டும்!


Friday, March 4, 2011

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்


கஜானனம் பூத கணாதி சேவிதம் என்று தொடங்கும் விநாயகர் சுலோகம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஷடானனம் என்று தொடங்கும் முருகன் சுலோகம் ஒன்றை இன்று தான் இணையத்தில் படித்தேன். இதுவும் எளிமையாக இருக்கவே 'சின்ன சின்ன சுலோகங்கள்' வகையில் இங்கே எழுதுகிறேன்.

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸுரஸைன்ய நாதம்
குஹாம் சதாஹம் சரணம் ப்ரபத்யே

ஷடானனம் - ஆறுமுகங்களை உடையவன்

குங்கும ரக்த வர்ணம் - குங்குமத்தைப் போல் மிகச் சிவந்த நிறம் கொண்டவன்; சேயோன்; சேந்தன்

மஹாமதிம் - பேரறிஞன்

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீகமான மயிலை வாகனமாகக் கொண்டவன்

ருத்ரஸ்ய ஸுனும் - உருத்திரனின் திருமகன்

ஸுரஸைன்ய நாதம் - தேவர் படைகளின் தலைவன்

குஹாம் - குகையில் வாழ்பவன்

சதா அஹம் சரணம் ப்ரபத்யே - (அவனை) எப்போதும் நான் கதியென அடைகிறேன்!

குருகுஹனைத் தியானிக்க ஒரு அருமையான சுலோகம்! எளிமையானதும் கூட!

Saturday, October 9, 2010

வந்தே பிருந்தாவனசரம்


யாதவாத்புதயம்! கண்ணனின் திருக்கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு வடமொழிக் காவியம்! வேதாந்த தேசிகன் என்னும் வைணவ ஆசாரியர் இயற்றியது! இதன் முதல் சுலோகம் இந்த சுலோகம். மிக அழகான சுலோகம்.

வந்தே பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்


கண்ணன் என்றவுடனே அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒன்றைச் சொல்லி முதல் வரியைத் துவங்குகிறார் ஆசாரியர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு! அந்த அன்பே வடிவமாக ஆயர்பாடியில் திரிந்தவர் கோபியர்களும் கோபர்களும். அந்த அன்பெல்லாம் பெற்று அன்பின் இமயமாய் திகழ்ந்தான் கண்ணன்!

பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்! பிருந்தாவனத்தில் வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்!

அடுத்த வரியில் ஆசாரியரின் மொழி விளையாட்டு தொடங்குகிறது. ஜயந்தீ என்று ஒரு பொருளிலும் வைஜயந்தீ என்று வேறொரு பொருளிலும் சொல் அமைய அடுத்த வரியைப் பாடியிருக்கிறார்.

சஹஸ்ரநாமம் என்றால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம் தான். அது போல் ஜயந்தி என்றால் அது கிருஷ்ண ஜயந்தி தான்! வேறு எத்தனையோ ஜயந்திகள் இருந்தாலும் ஜயந்தி என்ற சொல் கிருஷ்ண ஜயந்திக்கே விதப்பான (சிறப்பான) ஒன்று.

ஜயந்தீ ஸம்பவம்! குமாரஸம்பவம் என்று சிவகுமாரனின் பிறப்பைக் கூறும் காவியத்தைப் படைத்தானே காளிதாசன்! அங்கே வரும் அதே பொருளில் தான் இங்கேயும் ஸம்பவம் என்ற சொல் அமைகிறது! கிருஷ்ண ஜயந்தியில் பிறந்தவன் கண்ணன்!

தாம வைஜயந்தீ விபூஷணம்! மாலைகளில் எல்லாம் சிறந்த மாலை காட்டுப்பூக்களால் ஆன பல வண்ணப் பூக்கள் நிறைந்த மணமுள்ள மலர்கள் சிலவும் மணமில்லா மலர்கள் சிலவும் ஆன வைஜயந்தீ என்னும் மலர் மாலை!

காட்டில் இந்த யாதவன் கன்றுகள் மேய்க்கச் செல்லும் போது அங்கு மலர்ந்திருக்கும் பலவண்ண மலர்களைக் கொய்து மாலையாக்கி அணிந்து கொள்வானாம். அப்படிப்பட்ட வைஜயந்தீ மாலையை மிக அழகான அணிகலனாக அணிந்து கொண்டிருக்கும் எளிமையானவன் எங்கள் கண்ணன்!

அந்த முழுமுதற்பொருளை நீர்மையின் தீரத்தை 'வந்தே' என்று பலமுறை போற்றி வணங்குவோம்!

Tuesday, September 21, 2010

இராமாயணம் ஒரே சுலோகத்தில்...


கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரே சுலோகத்தில் அமைந்த பாகவதத்தைப் பார்த்தோம் சென்ற இடுகையில். இந்த இடுகையில் ஒரே சுலோகத்தில் அமைந்த இராமாயணத்தைப் பார்க்கப் போகிறோம்.

ஆதௌ ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ ஸம்பாஷனம்
வாலி நிக்ரஹனம் சமுத்ர தரணம் லங்காபுரி தஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹரணம் ஏததி ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம் - இராமன் தபோவனங்களுக்குச் செல்வதும்

ஹத்வா ம்ருகம் காஞ்சனம் - பொன்மானைக் கொல்வதும்

வைதேஹி ஹரணம் - சீதை கடத்தப்படுவதும்

ஜடாயு மரணம் - ஜடாயு காலமாவதும்

சுக்ரீவ ஸம்பாஷனம் - சுக்ரீவனுடன் நட்பு கொண்டு ஆலோசிப்பதும்

வாலி நிக்ரஹனம் - வாலியைக் கொல்வதும்

சமுத்ர தரணம் - கடலைக் கடப்பதும்

லங்காபுரி தஹனம் - இலங்கையை எரிப்பதும்

பஸ்சாத் - பின்னர்

ராவண கும்பகர்ண ஹரணம் - இராவண கும்பகருணர்களை அழிப்பதும்

ஏததி ராமாயணம் - இவையே இராமாயணம்!


இராமனைப் பணி மனமே!