Friday, July 2, 2010

கற்பூரம் போன்ற நிறத்தை உடையவன்!


கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சார சாரம் புஜகேந்த்ர ஹாரம்
சதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே
பவம் பவானி சஹிதம் நமாமி!


இன்று தான் முதன்முதலாக இந்த சுலோகத்தைப் படித்தேன். மிகவும் எளிமையான சுலோகம். அற்புதமாக இருக்கிறது.

கற்பூர கௌரம் - கற்பூரம் போன்ற நீறு பூத்த வெண்மையான நிறத்தை உடையவன்!

கருண அவதாரம் - கருணையே வடிவெடுத்தவன்

சம்சார சாரம் - இந்த உலகங்களுக்கெல்லாம் அடிப்படையானவன்

புஜகேந்த்ர ஹாரம் - பாம்புகளின் தலைவனை மாலையாக அணிந்தவன்

சதா வஸந்தம் ஹ்ருதய அரவிந்தே - மனத்தாமரையில் என்றும் வசிப்பவன்

பவம் - உலகம், உயிர் அனைத்திற்கும் காரணன்

பவானி சஹிதம் - என்றும் அம்பிகையைப் பிரியாதவன்

நமாமி - வணங்குகிறேன்.

கற்பூரத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவனை, கருணையே வடிவானவனை, உலகங்களுக்கெல்லாம் சாரமானவனை, பாம்பரசனை அணிந்தவனை, மனத்தாமரையில் என்றும் வசிப்பவனை, உலகங்களுக்கெல்லாம் காரணனை, அம்பிகை நாதனை அடியேன் வணங்குகிறேன்!

ஓம் நம:சிவாய!

Saturday, June 26, 2010

விளாம்பழமும் நாவற்பழமும்...





கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்


இந்த சுலோகத்தையும் நாம் நிறைய முறை சொல்லியிருக்கிறோம். எனக்கும் பொருள் புரிந்தும் புரியாமலும் தான் சொல்லியிருக்கிறேன். இன்று பொருள் எழுதலாம் என்று உட்கார்ந்தால் கபித்த என்றால் என்ன என்று தெரியவில்லை. உடனே இணைய சமஸ்கிருத அகராதியில் தேடிக் கண்டுபிடித்தேன். அது ஆங்கிலத்தில் Wood-apple என்று பொருள் போட்டிருந்தது. அது என்ன என்று தெரியவில்லை. உடனே கூகிளாண்டவரிடம் அதன் படத்தைக் காட்டு என்று கேட்டால் விளாம்பழத்தைக் காட்டுகிறார். அடடா, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் இந்தப் பழத்தைக் கொண்டு வந்து அப்படியே அவருக்குப் படைத்துவிட்டு நாம் சாப்பிடுவதற்கு முன்னர் மட்டும் சர்க்கரை கலந்து உண்போமே அந்தப் பழம் தான் கபித்த பழமா என்று தோன்றியது.

மற்றபடி இந்த சுலோகம் மிகவும் எளிமையான சுலோகம் தான்.

கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்

பூத
கண ஆதி சேவிதம் - பூத கணங்கள் முதற்கொண்டு அனைவராலும் வணங்கப்படுபவன்.

கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்.

உமா சுதம் - உமையின் மகன்.

சோக விநாச காரணம் - கவலைகள் தீர்வதற்கான காரணன்.

விக்னேஷ்வர - தடைகளுக்குத் தலைவன்.

பாத பங்கஜம் நமாமி - திருவடி தாமரைகளுக்கு போற்றி!

யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்!

இனி மேல் இந்த சுலோகத்தின் பொருள் மறக்காது என்று நம்புகிறேன்!

Thursday, June 17, 2010

கந்தனுக்கு மூத்தவன் கணேசன்!



ஸுமுகசைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ


ஐந்து கரத்தானின் பதினாறு திருநாமங்களைக் கூறும் சுலோகம் இது. இதனை நாமாவளியாகச் சொல்லும் போது

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூம்ரகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:


என்று சொல்லிப் போற்றுவோம்.

சுலோகத்தைப் பொருளுக்காகப் பிரித்தால்

ஸுமுக ச ஏகதந்த ச கபில: கஜகர்ணக
லம்போதர ச விகட: விக்னராஜ: விநாயக:
தூமகேது: கணாத்யக்ஷ பாலசந்த்ர: கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ


என்று அமையும்.

ஸுமுக (sumukha) - அழகான, ஆனந்தமான, அன்பான திருமுகத்தை உடையவன்
ஏகதந்த (Ekadhantha)- ஒற்றைக் கொம்பன்
கபில (kapila) - சிவந்த, மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தை உடையவன்
கஜகர்ணக (ghajakarNaka) - யானைக்காதன்
லம்போதர (lambOdhara)- பெரும்வயிற்றன்
விகட: (vikata) - ஆனந்தத்தைத் தருபவன்
விக்னராஜ: (vignaraaja) - தடைகளுக்கு அரசன்
விநாயக: (vinaayaka) - தனக்கு மிக்கவர் இல்லாதவன்
தூமகேது: (duumakEtu)- தடைகளைக் குறிப்பால் உணர்த்துபவன்
கணாத்யக்ஷ: (ganaathyaksha) - பிரபஞ்ச சக்திகளின் முதல்வன் (கணங்களின் முதல்வன் - கணபதி)
பாலசந்த்ர (paalachandra) - நிலவைப் போன்ற நெற்றியை உடையவன்
கஜானன (gajaanana) - யானைமுகன்
வக்ரதுண்ட (vakrathunda) - வளைந்த துதிக்கையன்
சூர்ப்பகர்ண (suurpakarNa) - முறக்காதன்
ஹேரம்ப (hEramba) - அம்பிகையின் அன்பிற்குரிய மகன்
ஸ்கந்தபூர்வஜ (skandhapuurvaja) - கந்தனுக்கு மூத்தவன்

இப்பதினாறு திருநாமங்களைச் சொல்லி வணங்க ஆனைமுகன் பிரசன்ன வதனனாய் மிக்க மகிழ்ந்து அருள் புரிவான்!

***

இந்த எழுத்துப்பதிவை ஒலிப்பதிவாக்கித் தந்த சுப்புரத்தினம் ஐயாவிற்கு மிக்க நன்றி.

Monday, June 14, 2010

அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்


அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
- இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

ஜெய் ஹனுமான் ஞான குண சாகர!

Sunday, March 28, 2010

அகஜானன பத்மார்கம் கஜானனமஹர்நிசம்...


அகஜானன பத்மார்கம் கஜானனமஹர்நிசம்
அநேக தந்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

விநாயகர் மேலான இந்த சுலோகத்தை நாம் நிறைய இடத்தில் படித்திருக்கிறோம்; சொல்லியிருக்கிறோம். இன்றைக்கு இந்தச் சுலோகத்தின் பொருளைப் பார்ப்போம்.

அகஜ ஆனன பத்ம ஆர்கம் கஜ ஆனனம் அஹர் நிசம்
அநேக தம் தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே


அகஜ - அக = மலை; அகஜ = மலைமகள்; பர்வத புத்திரி; பார்வதி.

ஆனன - திருமுகம்

பத்ம - தாமரை

ஆர்கம் - பகலவன்; சூரியன்

அகஜானன பத்மார்கம் - பார்வதியின் திருமுகம் என்னும் தாமரையை மலர்விக்கும் பகலவனைப் போன்றவன் அவள் திருமகன்!

கஜ ஆனனம் = யானைமுகத்தவன்!

அஹர் நிசம் = அஞ்ஞான இருளை நீக்கும் பகலைப் போன்றவன்; அஹ: = பகல்; நிசம் = இரவு!

பக்தானாம் = அடியவர்களுக்கு, அநேக = மிகுதியான; தம் (dham) = வரங்களை; தம் (tham) = அருளுபவன்.

ஏகதந்தம் = ஒற்றைக்கொம்பன்

உபாஸ்மஹே = நான் வணங்குகிறேன்.

Saturday, January 23, 2010

நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!



ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


எனக்கு என் தந்தையோ தாயோ உறவினர்களோ நண்பர்களோ மகன்களோ மகள்களோ பணியாட்களோ கணவனோ மனைவியோ கல்வியோ தொழிலோ எதுவுமே அடைக்கலம்/கதி இல்லை. நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த:
குஸம்ஸார பாஸ ப்ரபத்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

பெரும் துன்பத்தைத் தரும் இந்த பிறப்பிறப்புக் கடலில் நான் இருக்கிறேன். இத்துன்பத்தைக் கண்டு பெரும் பயம் கொள்கிறேன். பாவத்தாலும் காமத்தாலும் கஞ்சத்தனத்தாலும் ஆசையாலும் எப்போதும் பீடிக்கப்பட்டு பிறப்பிறப்புக் கட்டினால் கட்டப்பட்டு பயனில்லா வாழ்கை வாழ்கிறேன். நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

ந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

தானம் தருவதை அறியேன்; தியான யோகம் அறியேன்; துதிகள் மந்திரங்கள் தந்திரங்கள் அறியேன்; பூஜை செய்யும் முறைகளும் அறியேன்; அனைத்தையும் துறக்கும் யோகமும் அறியேன். நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!



ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாத
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் தவமேகா பவானி!

புண்ணியச் செயல்களை அறியேன்; புண்ணியத் தலங்களை அறியேன்; முக்தி வழிகளை அறியேன்; இறையுடன் மனத்தைக் கலக்கும் வழி அறியேன்; பக்தியும் அறியேன்; விரதங்களையும் அறியேன். தாயே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

குகர்மீ குசங்கீ குபுத்தி குதாச:
குலாசாரஹீன: கதாசாரலீன:
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நான் தீய செயல்களைச் செய்பவன்; தீய உறவுகளை உடையவன்; தீய எண்ணங்களை உடையவன்; தீயவர்களிடம் பணி செய்பவன்; நன்னடத்தை இல்லாதவன்; தீய நடத்தை உடையவன்; தீய பார்வை கொண்டவன்; தீய சொற்களின் குவியல்களைக் கொண்டவன்; எப்போதும்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிசிதேஸ்வரம் வா கதாசித்
ந ஜானாமி சான்யத் சதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

மக்களின் தலைவனையோ, மகாலக்ஷ்மி தலைவனையோ, மகேசனையோ, தேவர் தலைவனையோ, நாளின் தலைவனையோ, இரவின் தலைவனையோ மற்ற எந்தத் தலைவனையும் நான் அறியேன்! எப்போதும்! கதியானவளே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!



விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாசே
ஜலே ச அனலே பர்வதே சத்ரு மத்யே
அரண்யே சரண்யே சதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

விவாதங்களிலும், கவலையிலும், விபத்துகளிலும், தூர தேசங்களிலும், நீரிலும், நெருப்பிலும், மலையிலும், எதிரிகள் நடுவிலும், காட்டிலும், கதியானவளே, எப்போதும் என்னை நன்கு காத்தருள்வாய்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

அநாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹா க்ஷீண தீன: சதா ஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நான் அனாதை! நான் ஏழை! முதுமையும் நோயும் கொண்டவன்! நான் மிகவும் களைத்தவன்! நான் மிகவும் வருந்தத்தகுந்தவன்! எப்போதும் பிரச்சனைகளால் விழுங்கப்படுபவன்! எப்போதும் விபத்துகளால் நஷ்டமடைபவன்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!




Wednesday, May 6, 2009

நீர் மோரை விற்பதா? கோவிந்தனை விற்பதா?


'என்ன இது வாசலில் யாரோ இனிய குரலில் கோவிந்தா, தாமோதரா, மாதவா என்று கூவிக் கொண்டே செல்கிறார்களே'

"அடியே தயிர்க்காரி. தயிர்க்கலயத்தைத் தலையில் தாங்கிக் கொண்டு செல்கிறாய். ஆனால் தயிர் தயிர் என்று கூவாமல் வேறு ஏதோ பெயர் சொல்லிக் கூவுகிறாயே?"

'என்ன இது? இவள் ஒன்றும் விடை சொல்ல மாட்டேன் என்கிறாளே. இந்தப் பெண்களே இப்படித் தான். நம் அகமுடையாளும் சில நேரம் இப்படித் தான் இந்தப் பெயர்களைக் கூவிக் கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் ஒளபாசனத்திற்குத் (இல்லறத்தார் செய்யவேண்டிய தினசரி தீ வழிபாடு) தேவையான பொருட்களை எடுத்து வைக்காமல் இவளும் கோவிந்த தாமோதர மாதவா என்று புலம்பத் தொடங்கிவிடுகிறாள். உலகத்தில் எல்லா பெண்களுக்கும் இந்த நோய் வந்துவிட்டது போலும்'

இப்படி எண்ணிக் கொண்டே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கண்ணனின் பாதக்கமலங்களில் பறி கொடுக்கப்பட்ட மனத்துடன் 'கோவிந்தா தாமோதரா மாதவா' என்று கூவிக் கொண்டு நீர் மோர் விற்றுச் செல்லும் இடைப்பெண்ணைப் பார்த்துக் கொண்டே இல்லத்தினுள் செல்கிறார் அந்த வீட்டுக்கு உரியவர்.

***

விக்ரேது காமாகில கோப கன்யா
முராரி பதார்பித சித்த வ்ருத்தி
தத்யோதகம் மோஹவசாத் அவோசாத்
கோவிந்த தாமோதர மாதவேதி


ஒரு கோபகன்னிகை தன்னுடைய மனம், மெய், மொழி என்ற அனைத்தும் கண்ணனின் பாதக்கமலத்தில் அடைக்கலமாகக் கொடுத்து அந்த இன்பம் தந்த மயக்கத்தில் தன் தலையில் நீர்மோரைத் தாங்கிச் சென்றாலும் 'கோவிந்த தாமோதர மாதவா' என்று கூவிச் செல்கிறாள்.