Tuesday, April 14, 2009

ஆதித்ய ஹ்ருதயம் – 6




ஆதித்ய ஹ்ருதயத்தின் இறுதிப்பகுதி - 26 முதல் 31 வரையிலான சுலோகங்கள்:

பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

PuujayasvainamEkaakrO dEvadEvam jagathpathim
yEthath thrikuNitham japthvaa yuththEshu vijayishyasi



தேவதேவம் - தேவர்களுக்கும் தெய்வமானவனை

ஜகத்பதிம் - உலகத்தை உடையவனை

பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ - ஒரு நிலைப்பட்ட மனத்துடன் வணங்குவாய்.

ஏதத் - இந்த ஸ்தோத்திரத்தை

த்ரிகுணிதம் ஜப்த்வா - மும்முறை ஜபித்து

யுத்தேஷு - போரில்

விஜயிஷ்யஸி - வெற்றி பெறுவாய்

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம ச யதா கதம்

asminkshanE mahAbhAhO rAvanam thvam vadhishyasi
yEvam ukthvA thathAkaSthyO jakAma cha yathA gatham


அஸ்மின் க்ஷணே - இந்த நொடியிலேயே

மஹாபாஹோ
- பெரும் தோள்வலிமை உடையவனே

ராவணம் த்வம் வதிஷ்யஸி - இராவணனை நீ வதைப்பாய்

ஏவம் உக்த்வா - இப்படி சொல்லிவிட்டு

ததா அகஸ்த்யோ - அங்கிருந்த அகத்தியர்

ஜகாம ச யதா கதம் - எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத் ததா
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவாந்

yEthas sruthvA mahAthEjA nashta sOkO bhavath thadhA
dhArayamAsa suprIthO rAghava: prayathAthmavAn


ஏதச் ச்ருத்வா - இதனைக் கேட்டு (இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்ரத்தைக் கேட்டு)

மஹாதேஜா - பெரும் வலிமையுள்ளவனும்

தாரயாமாஸ - நோக்கத்தில் உறுதியுள்ளவனும்

சுப்ரீதோ - மிகவும் மகிழ்ந்தவனும்

ராகவ: ப்ரயதாத்மவாந் - முயற்சிகளில் சிறந்தவனும் ஆன இராகவன்

நஷ்ட சோகோ பவத் ததா - அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்சம் அவாப்தவாந்
த்ரிர் ஆசம்ய சுசிர்பூத்வா தநுர் ஆதாய வீர்யவாந்

Adityam prEkshya japthvA thu param harsam avApthavAn
thrirAsamya shuchir bhUthvA dhanur AthAya vIryavAn


த்ரிர் ஆசம்ய - மும்முறை ஆசமனீயம் செய்து



சுசிர்பூத்வா – சுத்தமடைந்த உடலினை அடைந்தான்



தநுர் ஆதாய - வில்லை ஏந்தியவன்



வீர்யவாந் - வீரத்தில் சிறந்தவன்



ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து - ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (இந்த ஸ்தோத்ரத்தை) ஜபித்து



பரம் ஹர்சம் அவாப்தவாந் - மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வ யத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

rAvanam prEkshya hrustAthmA yudhdhAya samupAgamath
sarva yathnEna mahataa vadhE thasya dhruthObhavath

ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் - போர் செய்யும் நோக்கத்துடன் வரும்


ராவணம் ப்ரேக்ஷ்ய - இராவணனைப் பார்த்து


ஸர்வ யத்னேன மஹதா - மேலான எல்லா முயற்சிகளுடனும்


வதே தஸ்ய த்ருதோபவத் - அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

அத ரவி ரவதந் நிரீக்ஷ்ய ராமம்
முதிதமநா பரமம் ப்ரஹ்ருஷ்யமான:
நிசிசரபதி சம்க்ஷயம் விதித்வா
சுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி

atha ravi ravadan nirIkshya rAmam
mudhithamanA paramam prahrishyamAna:
nishicharapatir samkshayam vidithvA
suragana madhyagatO vachastvarEti


அத - அப்போது


சுரகண மத்யகதோ - தேவர்கள் கூட்டத்தின் நடுவில் இருந்த



ரவி - சூரியன்


முதிதமநா - மிகவும் மகிழ்ந்த மனத்துடன்


பரமம் ப்ரஹ்ருஷ்யமான: - மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக



நிசிசரபதி - இரவில் திரிபவர்களான அரக்கர்களின் தலைவனான இராவணனின்


சம்க்ஷயம் விதித்வா - அழிவு நேரம் நெருங்கி விட்டதை அறிந்து



ரவதந் நிரீக்ஷ்ய ராமம் - 'விரைவில் நடத்துவாய் இராமா'


வசஸ்த்வரேதி - என்று சொன்னான்.

இதி ச்ரிமத் ராமாயணே வால்மீகியே ஆதிகாவ்யே ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

இத்துடன் ச்ரிமத் இராமாயணத்தில் வால்மீகி இயற்றிய முதல் காவியத்தில் இருக்கும் ஆதித்ய ஹிருதயம் என்ற ஸ்தோத்திரம் நிறைவடைந்தது.

Friday, January 16, 2009

ஆதித்ய ஹ்ருதயம் - 5

ஆதித்ய ஹ்ருதயத்தின் 21 முதல் 25 வரையிலான சுலோகங்கள்:

தப்த சாமீகராபாய வஹ்னயே விஸ்வகர்மணே
நம: தமோபிநிக்னாய ருசயே லோகசாக்ஷிணே

taptha chaamiikaraabhaaya vahnayE visva karmanE
nama: thamObhinignaaya rucayE lOkasAkshinE


தப்த சாமீகராபாய - உருக்கிய பொன்னின் நிறத்தைக் கொண்டவருக்கு

வஹ்னயே - தீ வடிவானவருக்கு

விஸ்வகர்மனே - உலகத்தின் அனைத்து செயல்களையும் செய்பவருக்கு

தம அபிநிக்னாய - இருளை அழிப்பவருக்கு

ருசயே - உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு

லோக சாக்ஷினே - உலகத்தில் சாட்சியாக நிற்பவருக்கு

நம: - வணக்கங்கள்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஸத்யேஷ கபஸ்திபி:

nasayathyEsha vai bhuutham thadEva Srujathi prabhu:
pAyathyEsha tapathyEsha varSathyEsha gabhastibhi:

நாசயதி ஏஷ வை பூதம்: - உயிர்களை எல்லாம் இவனே அழிக்கிறான்

தத் ஏவ ஸ்ருஜதி - அவற்றை இவனே பிறப்பிக்கிறான்

ப்ரபு: - இறைவன் இவனே

பாயதி ஏஷ - இவனே காக்கிறான்

தபதி ஏஷ - இவனே வெயிலாகக் காய்கிறான்

வர்ஸதி ஏஷ - இவனே மழையாகப் பொழிகிறான்

கபஸ்திபி: தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால்

இவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் செய்கிறான். இவனே வெயிலாகவும் மழையாகவும் இருக்கிறான்.

ஏஷ சுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸ்டித:
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோத்ரினாம்

yEsha supthEsu jAkarthi bhUthEsu pariniStitha:
yEsha yEvAknihOthram cha phalam chaivaaknihOthrinAm

ஏஷ - இவனே

பூதேஷு - எல்லா உயிர்களிலும்

சுப்தேஷு ஜாகர்தி பரிநிஸ்டித: - அவை உறங்கும் போதும் விழிப்பாக நிலை நிற்கிறான். (அவற்றின் உயிராக நிற்கிறான்)

ஏஷ ஏவ அக்னி ஹோத்ரம் ச - இவனே தீ வழிபாட்டின் வடிவமாகவும் இருக்கிறான்

பலம் ச ஏவ அக்னி ஹோத்ரினாம் - அத்தீவழிபாட்டின் பயனாகவும் இருக்கிறான்

வேதாஸ் ச க்ரதவசைவ க்ரதூனாம் பலம் ஏவ ச
யானி க்ருத்யானி லோகேஷு சர்வ ஏஷ ரவி: ப்ரபு:

vEdASca krathavascaiva krathUnAm phalamEva ca
yAni kruthyAni lOkEshu sarva yEsha ravi: prabhu:

ச ஏவ - இவனே

வேதா: - வேதமாகவும்

க்ரத: - சடங்குகளாகவும்

க்ரதூனாம் பலம் - சடங்குகளின் பயனாகவும்

ஏவ ச - இவனே இருக்கிறான்

லோகேஷு - இவ்வுலகத்தில்

யானி க்ருத்யானி - என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ

சர்வ ஏஷ - அவை எல்லாமும் இவனே

ரவி: - ஒளி படைத்தவன்

ப்ரபு: - இறைவன்; தலைவன்

ஏனமாபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச
கீர்த்தயேன புருஷ: கச்சின் நாவஸீததி ராகவ:

yEnamApathSu kruchrEshu kAnthArEshu bhayEshu cha
kIrthayEna purusha: kascin nAvaSithathi rAghava:


ராகவ: - இராகவா!

ஏனம் - இவன்

க்ருச்ரேஷு ஆபத்ஸு - எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும்

காந்தாரேஷு - காடுகளிலும்

பயேஷு ச - பயமுறுத்தும் நேரங்களிலும்

கீர்த்தயேன புருஷ: - இவனைப் பாடி வழிபடுவோரை

கச்சின் - எப்போதும்

நாவஸீததி - கைவிடமாட்டான்.

Friday, December 5, 2008

நானே சிவன்! நானே சிவம்! சிவோஹம்! சிவோஹம்!

இது ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் (விடுதலை ஆறு). இந்தப் பாடலின் நடுவிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வருகிறது. அது சுவையான சுகமான மொழிபெயர்ப்பு. இருந்தாலும் சொல்லுக்குச் சொல் விளக்கம் இருந்தால் நல்லது என்று எண்ணி தமிழில் இங்கே மொழிபெயர்த்து இடுகிறேன்.

ஓம் ஓம் ஓம்

சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் .....

மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மனோ புத்தி அஹங்கார சித்தா நின அஹம் - நான் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவுமில்லை.

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே - நான் காதுகளும் இல்லை; நாவும் இல்லை

ந ச க்ராண நேர்த்ரே - நான் நாக்கும் இல்லை; கண்களும் இல்லை

ந ச வ்யோம பூமி: - நான் வானமும் இல்லை; பூமியும் இல்லை

ந தேஜோ ந வாயு: - நான் ஒளியும் இல்லை; காற்றும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.



ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ச ப்ராண சங்க்யோ ந வை பஞ்ச வாயு: - நான் மூச்சால் கட்டுப்பட்டவன் இல்லை; நான் ஐந்துவிதமான காற்றுகளும் இல்லை (ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று)

ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோச: - நான் ஏழுவிதமான உடற்பொருட்களும் இல்லை (ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை); நான் ஐந்துவிதமான போர்வைகளும் இல்லை (அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந வா பாணி பாதம் ந ச உபஸ்த பாயு: - நான் கைகால்களும் இல்லை; நான் மற்ற உறுப்புகளும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந மே த்வேஷ ராகௌ - எனக்கு வெறுப்பும் விருப்பும் இல்லை

ந மே லோப மோஹௌ - எனக்கு பற்றுதலும் மயங்குதலும் இல்லை

மதோ ந ஏவ மே ந ஏவ மாத்ஸர்ய பாவ: - எனக்கு கருவமும் இல்லை; பொறாமையும் இல்லை

ந தர்ம: - நான் அறமும் இல்லை

ந ச அர்த்த: - நான் பொருளும் இல்லை

ந காம: - நான் இன்பமும் இல்லை

ந மோக்ஷ: - நான் வீட்டுப்பேறும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந புண்யம் ந பாபம் - நான் புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை

ந சௌக்யம் ந துக்கம் - நான் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை

ந மந்த்ரோ ந தீர்த்தம் - நான் மந்திரமும் இல்லை புண்ணிய தீர்த்தமும் இல்லை

ந வேதா ந யக்ஞ: - நான் வேதமும் இல்லை யாகங்களும் இல்லை

அஹம் போஜனம் ந ஏவ போஜ்யம் ந போக்தா - நான் உணவும் இல்லை உண்ணும் காரியமும் இல்லை உண்டு அனுபவிப்பவனும் இல்லை (நான் புலனுக்குட்படும் பொருட்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிக்கும் செயல்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிப்பவனும் இல்லை)

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ம்ருத்யுர் ந சங்கா - எனக்கு மரணம் இல்லை; எனக்கு பற்றுதல் இல்லை

ந மே சாதி பேத: - எனக்கு சாதி பேதங்கள் இல்லை

பிதா ந ஏவ மே ந ஏவ மாதா ச ஜன்மா - எனக்கு தாய் தந்தையர் இல்லை; எனக்கு பிறப்பும் இல்லை

ந பந்துர் ந மித்ரம் - எனக்கு உறவுகள் இல்லை; நட்புகள் இல்லை

குருர் ந ஏவ சிஷ்யா - நான் குருவும் இல்லை சிஷ்யனும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


அஹம் நிர்விகல்ப - நான் மாற்றம் இல்லாதவன்

நிராகாரரூப: - உருவம் இல்லாதவன்

விபுத்வா ச - எங்கும் நிறைந்தவன்

சர்வத்ர - எல்லாம் ஆனவன்

சர்வேந்த்ரியானாம் - எல்லா உடல்களிலும் வசிப்பவன்

ந ச சங்கடம் - எனக்கு கட்டுப்பாடுகள் இல்லை

ந ஏவ முக்தி: ந மே யா - அதனால் எப்போதும் எனக்கு விடுதலை என்பதும் தேவையில்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

Tuesday, November 4, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 4

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் 16 முதல் 20 வரையிலான சுலோகங்கள்.

நம: பூர்வாய கிரயே பஸ்சிமாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே தினாதி பதயே நம:

nama: puurvaaya girayE pascimaathrayE nama:
jyOthir ganaanaam pathayE dinaathi pathayE nama:


நம: - வணக்கங்கள்.

பூர்வாய கிரயே - கிழக்கு மலையில் உதிப்பவருக்கு. இந்த ஸ்தோத்ரம் ராம ராவண யுத்தத்திற்கு முன்னர் உபதேசிக்கப்பட்டதால் இலங்கையில் இந்த ஸ்தோத்ரம் தோன்றியதாகக் கூறலாம். தமிழகத்தில் சூரிய உதயம் கடலில் நடக்கும். இலங்கையில் கிழக்கு திசையில் ஏதேனும் மலை இருக்கிறதா; அந்த மலையைத் தான் இங்கே உதயசூரியனின் மலை என்று சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பஸ்சிமாத்ரயே - மேற்கு திசையில் மறைபவருக்கு

ஜ்யோதிர் கணானாம் பதயே - ஒளிக்கூட்டங்களின் தலைவருக்கு

தினாதி பதயே - நாளின் தலைவருக்கு

நம: - நமஸ்காரங்கள்

ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம: சஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

jayaaya jayabhadraaya haryasvaaya namO nama:
namO nama: sahasraamsO aadhityaaya namO nama:

ஜயாய - வெற்றி வடிவானவருக்கு

ஜயபத்ராய - வெற்றியெனும் மங்கலத்தைத் தருபவருக்கு

ஹர்யஸ்வாய - பச்சை நிறக்குதிரையை உடையவருக்கு

நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்

சஹஸ்ராம்சோ - ஆயிரக்கணக்கான பகுதிகளை/கதிர்களை உடையவருக்கு

ஆதித்யாய - அதிதியின் மகனுக்கு

நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நம:

nama ugraaya viiraaya saarangaaya namO nama:
nama: padmaprabhOthaaya maarthaandaaya namO nama:

நம: - வணக்கங்கள்

உக்ராய - உக்கிரமானவருக்கு

வீராய - வீரம் உடையவருக்கு

சாரங்காய - கதிர்கள் என்னும் அம்புகளை ஏவும் வில்லை உடையவருக்கு

நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்

பத்மப்ரபோதாய - தாமரையை மலரச் செய்பவருக்கு; இதயத் தாமரையை மலரச் செய்பவருக்கு; ஞானத்தை வழங்குபவருக்கு

மார்தாண்டாய - மிக்க வலிமை பொருந்தியவருக்கு

நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.

ப்ரஹ்மேசானாச்யுதேசாய சூர்யாய ஆதித்ய வர்சஸே
பாஸ்வதே சர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

brahmEsaanaacyutEsaaya suuryaaya aaditya varchasE
bhaasvathE sarva bhakshyaaya roudraaya vapusE nama:

ப்ரஹ்ம ஈசான அச்யுத ஈசாய - பிரமன், ஈசானன் என்னும் சிவன், அச்சுதன் என்னும் விஷ்ணு என்னும் மூவருக்கும் தலைவராக இருப்பவருக்கு

சூர்யாய - சூரியனுக்கு

ஆதித்ய வர்சஸே - ஆதித்யன் என்ற பெயர் உடைய ஒளிர்பவருக்கு

பாஸ்வதே - மிகுந்த ஒளியை வீசுபவருக்கு

சர்வ பக்ஷாய - அனைத்தையும் உண்பவருக்கு; கால உருவானவருக்கு

ரௌத்ராய - பயத்தை உண்டாக்குபவருக்கு

வபுஷே - ஒளிரும் திருமேனியை உடையவருக்கு; உலகங்களையும் உயிர்களையும் உடலாக உடையவருக்கு

நம: - வணக்கங்கள்.

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாய அமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிசாம் பதயே நம:

tamOgnaaya himagnaaya satrugnaayamithaathmanE
krutagnagnaaya dEvaaya jyOthisaam pathayE nama:

தமோக்னாய - இருளை அழிப்பவருக்கு

ஹிமக்னாய - குளிரை அழிப்பவருக்கு

சத்ருக்னாய - எதிரிகளை அழிப்பவருக்கு

அமிதாத்மனே - எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவருக்கு; எல்லா உலகங்களுக்கு உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு

க்ருதக்னக்னாய - செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு

தேவாய - ஒளி வீசுபவருக்கு

ஜ்யோதிசாம் பதயே - ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு

நம: - வணக்கங்கள்.

Saturday, October 4, 2008

க்ருஷ்ணாவின் கூக்குரல் கேட்டதா?


கொடியவர்கள் நிறைந்த இடத்தில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அது தான் உலக இயற்கை போலும். ஆனால் அந்த நல்லவர்கள் கொடியவர்களுக்கிடையே வாய் மூடி மௌனமாக இருக்கும் போது அவதிப்படுபவர்களுக்கு யார் தான் கதி? திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை.

அக்ரே குரூனாம் அத பாண்டவானாம்
துச்சாசனேஹ்வாத வஸ்த்ர கேச
க்ருஷ்ணா தத் அக்ரோசத் அனன்ய நாத
கோவிந்த தாமோதர மாதவேதி


கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் முன்னிலையில் துச்சாதனன் தன் உடையையும் தலை முடியையும் இழுத்து அவமானப்படுத்தும் போது மிக்க சினம் கொண்ட க்ருஷ்ணையான திரௌபதி வேறு கதி ஒன்றும் இன்றி கூவி அழைத்தாள் 'கோவிந்தா தாமோதரா மாதவா' என்று.

Monday, September 22, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 3

ஆதித்ய ஹ்ருதயத்தின் முதல் பத்து சுலோகங்களை சென்ற இடுகைகளில் பார்த்தோம். இந்த இடுகையில் அடுத்த ஐந்து சுலோகங்களைப் பார்க்கலாம்.

ஹரித் அஸ்வ: சஹஸ்ரார்ச்சி: சப்த சப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்பு: த்வஸ்டா மார்தாண்ட அம்சுமான்

harisdasva: sahasraarchi: sapta saptir mariichimaan
timironmadhana: sambu: tvaStaa maarthaanda amsumaan

ஹரித் அஸ்வ: - பச்சைக்குதிரையை உடையவன். உலகெங்கும் பசுமை நிறம் செழிக்க சூரியனின் கதிர்கள் தேவை. அந்த பச்சைப்பயிர்களை வளர்ப்பவன் ஆதலால் அவன் பச்சைக்குதிரையை உடையவன் ஆகிறான்.

சஹஸ்ரார்ச்சி: - ஆயிரக்கணக்கான கதிர்களை உடையவன். தன்னுடைய ஆயிரக்கணக்கான கதிர்களால் இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்.

சப்த சப்தி: - ஏழு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன். இவனின் கதிர்கள் எல்லா வகையான நிறங்களும் உடையவை. அனைத்து நிறங்களும் சேர்ந்த இவன் கதிரே இவன் தேர். ஆனாலும் அந்த எல்லா நிறங்களிலும் ஏழு நிறங்கள் மட்டுமே வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த நிறங்களை வானவில்லில் காணலாம். அந்த ஏழு நிறங்களும் இங்கே ஏழு குதிரைகளாகச் சொல்லப்படுகின்றன.

ஒரு வாரம் என்பதை ஒரு தேர் என்று கொண்டால் அந்த வாரத்தின் நாட்களைக் குதிரைகளாகக் கொள்ளலாம். அப்படி ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தை ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு தேராக உடையவன் கதிரவன்.

மரீசிமான் - தன்னுடைய கதிர்களால் உலகனைத்தையும் நடத்துபவன். உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.

திமிரோன் மதன: - இருட்டையும் அறியாமையையும் அழிப்பவன். இவனது கதிர்கள் இருக்கும் இடத்தில் இருட்டு இருப்பதில்லை. இருட்டில் இருக்கும் வரை தன்னுடைய உடலே தெரியாமல் இருக்கின்றது; இவனது கதிர்கள் வந்தவுடன் அனைத்து இயக்கங்களும் நடைபெற்று உலக அறிவு, ஆன்மிக அறிவு என்ற எல்லா அறிவும் கிட்டும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அதனால் இவன் அறியாமை இருளையும் நீக்குபவன் ஆகிறான்.

சம்பு: - மகிழ்ச்சியைத் தருபவன். அறியாமை என்னும் இருளை நீக்குவதால் உயிர்கள் அறிவு பெறுகின்றன. அந்த அறிவால் நன்மையும் மகிழ்ச்சியும் அடைகின்றன.

த்வஸ்டா - அனைத்தையும் குறைப்பவன். எந்தப் பொருளும் இவனது கதிர்களில் நீண்ட நாட்கள் இருந்தால் தன்னுடைய உருவத்திலிருந்து சுருக்கமடைகின்றது. குறிப்பாக நீர். அனைத்தையும் குறைப்பதால் உலக சுழற்சிக்கு வழி வகுக்கிறார் சூரியன். நீரைக் குறைப்பதால் மேகங்களை உருவாக்குகிறான்; மழையாகப் பொழிய வைக்கிறான். அதே போல் இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.

மார்தாண்ட - மிகுந்த வலிமை உடையவன். இவனிடமிருந்தே உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் வலிமையைப் பெறுகின்றன. அனைத்துப் பொருட்களுக்கும் வலிமையைத் தரும் இவன் எல்லாவற்றையும் விட வலிமை மிகுந்தவன்.

அம்சுமான் - எங்கும் பரவும் கதிர்களை உடையவன். மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும் தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதேர்புத்ர: சங்க: சிசிரநாசன:

hiranyakarba: sisira: tapanO bhaaskarO ravi:
agnikarbO athithEr putra: sankha: sisira naasana:


ஹிரண்யகர்ப்ப: - பொன்மயமான கருப்பையை உடையவன். உலகங்களின் தோற்றத்திற்குக் காரணமானவன் என்பதால் இவன் பொன்மயமான கருப்பையை உடையவன் எனப்படுகிறான். உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.

சிசிர: - குளிரைத் தருபவன். இவனுடைய கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை. அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.

தபனோ - நடுக்கத்தைத் தருபவன். இவன் தரும் குளிரால் உடல் நடுக்கம் தருபவன். இவனுடைய பெருமையைக் கண்டு உடலும் மனமும் நடுங்கச் செய்பவன்.

பாஸ்கர: - எல்லாவற்றையும் ஒளிவீசச் செய்பவன். இவனுடைய ஒளி பெற்று எல்லா உலகங்களும் அவற்றில் இருக்கும் பொருட்களும் ஒளி வீசுகின்றன. சந்திரனும் இவனுடைய ஒளியால் தான் ஒளிர்கிறான். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.

ரவி: - எல்லாவற்றையும் உருவாக்குபவன். உலகத்தில் எந்தப் பொருள் உருவாக வேண்டுமென்றாலும் இவனது கதிர்களும் அதிலிருந்து கிடைத்த சக்தியும் தேவை.

அக்னிகர்ப்ப: - தீயை தன்னுடலாகக் கொண்டவன். அத்தீயிலிருந்தே உயிர்களைப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் செய்யும் கதிர்களை உண்டாக்கி எல்லாத் திசைகளிலும் வீசுபவன்.

அதிதேர் புத்ர: - அதிதியின் மகன். தேவமாதாவான அதிதியின் முதன்மையான மக்களில் ஒருவன்.

சங்க: - ஆனந்தமயமானவன். இவனது கதிர்களால் உலகங்களுக்கெல்லாம் ஆனந்தத்தைத் தருபவன்.

சிசிரநாசன - குளிரை அழிப்பவன். இவனது கதிர்களின் குறைவினால் ஏற்பட்டக் குளிரை இவனது கதிர்களில் பெருக்கத்தால் நீக்குபவன்.

வ்யோமநாத: தமோபேதி ருக் யஜுஸ் சாம பாரக:
கன வ்ருஷ்டி: அபாம் மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம:

vyOmanaatha: thamObhEdi rug yajuS saama paaraga:
ghanavrushti: apaam mithrO vindhyaviithi plavangama:

வ்யோமநாத: - வானத்தின் தலைவன். வானவீதியில் சூரிய குடும்பத்தின் தலைவன் இவனே. வானத்தில் கண்களுக்கு நேரடியாகத் தெரியும் பொருட்களில் மிகப்பெரியவன் இவனே.

தமோ பேதி - இருளை உடைப்பவன். சூரியனின் கதிர்கள் தோன்றும் வரை இருள் கனத்த இரும்புத் திரையைப் போல் சூழ்ந்திருக்கிறது. இவனது கதிர்கள் வந்தவுடனேயே பெரிய சம்மட்டியால் உடைக்கப்பட்டு சுக்கு நூறாகச் சிதறியதைப் போல் இருள் காணாமல் போகின்றது.

ருக் யஜுஸ் சாம பாரக: - ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன். வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள். அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர். இங்கே சூரியன் மூவேதங்களையும் கண்டு வெளிப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.

கன விருஷ்டி: - கடும் மழையைப் பெய்விப்பவன். இவனது கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களாலேயே உலகில் மழை பொழிகின்றது. அதனால் இவனே மழையைப் பொழிவிப்பவன் ஆகின்றான்.

அபாம் மித்ர: - நீருக்குத் தோழன். சூரியனும் நீரும் தோழர்கள் என்பதாலேயே இவனது கதிர்கள் பட்டவுடன் நீர் தன் உரு மாறி இவனுடன் கலந்து கொள்ளச் செல்கிறது போலும்.

விந்த்ய வீதி ப்லவங்கம: - விந்திய மலையை ஒட்டிய வீதியில் விரைவாகச் செல்பவன். சூரியனை பூமி சுற்றும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வானத்தில் அவன் வருடத்தில் ஆறு மாதம் வட பக்கத்திலும் ஆறு மாதம் தென் பக்கத்திலும் செல்வதாகத் தோன்றும். அதனையே உத்தராயணம் என்றும் தட்சினாயணம் என்றும் கூறுவார்கள். அந்த வடக்கு வீதியும் தெற்கு வீதியும் விந்திய மலைத்தொடரை ஒட்டி இருப்பதாகக் கூறுவதும் மரபு. அந்த வகையில் சூரியன் விந்திய மலை வீதியில் விரைவாகச் செல்பவனாகச் சொல்லப்படுகிறான்.

ஆதபி மண்டலி ம்ருத்யு: பிங்கல சர்வதாபன:
கவிர் விஷ்வோ மஹா தேஜ ரக்த சர்வ பவோத்பவ:

Athapi mandali mruthyu: pingala sarvathaapana:
kavir vishvO mahaathEja raktha sarva bhavOthbhava:

ஆதபி: - கொளுத்துபவன். இதற்கு விளக்கம் தேவையில்லை. எல்லோரும் அனுபவித்திருப்போம்.

மண்டலி - வட்டவடிவமானவன்.

ம்ருத்யு: - மரணவடிவானவன். உலகத்தில் எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும் அனைத்து செயல்களையும் நடத்துவிப்பவன் என்பதால் அவன் மரண வடிவாகவும் இருக்கிறான்.

பிங்கல: - மஞ்சள் வண்ணம் கொண்டவன். சூரியனை மரணம் என்று சொன்னவுடன் அவன் மறையும் போது தோன்றும் பொன்வண்ணம் நினைவிற்கு வருகின்றது போலும்.

சர்வ தாபன: - அனைத்தையும் தகிப்பவன்.

கவி: - அனைத்தையும் அறிந்தவன்.

விஷ்வோ - அண்ட வடிவானவன்.

மஹாதேஜ: - மிகப்பெரும் ஒளிவடிவானவன்.

ரக்த: - சிவந்த வண்ணம் கொண்டவன். பெரும் ஒளிவடிவானவன் என்றவுடன் காலையில் சூரியன் தோன்றும் போது தோன்றும் செவ்வண்ணம் நினைவிற்கு வருகிறது போலும்.

சர்வ பவோத்பவ: - எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

நக்ஷத்ர க்ரஹ தாரானாம் அதிபோ விஷ்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே

nakshatra graha thaaraanaam adhibO vishva bhaavana:
tEjasaam api tEjasvi dvaadasaathman namOSthutE

நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிப: - விண்மீன்கள், கிரகங்கள் போன்ற வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் தலைவன்.

விஷ்வ பாவன: - அண்டத்தின் பிறப்பிடம்

தேஜசாம் அபி தேஜஸ்வி - ஒளிவீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன்

த்வாதசாத்மன் - பன்னிரு வடிவங்கள் கொண்டவன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு வடிவம் கதிரவனுக்கு இருப்பதாகக் கூறுவது மரபு. பன்னிரு ஆதித்யர்கள் என்று அவர்களைச் சொல்வார்கள். அவர்கள் இந்திரன், தாதா, பர்ஜன்யன், த்வஸ்டா, பூஷா, அர்யமா, பகன், விவஸ்வந்தன், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன்.

நமோஸ்துதே - உனக்கு எங்களின் வணக்கங்கள்.

Friday, September 12, 2008

கோவிந்தா தாமோதரா மாதவா! கரையேற்றுவாய் எங்களை!


ஆகா. அழகான பாடல் கேட்கிறதே அங்கே. யார் பாடுவது?

ஓ. கடைத்தெருவில் இந்த இடைச்சிறுவர்கள் பாடிக் கொண்டு செல்கிறார்கள். என்ன விந்தை? பால், தயிர், வெண்ணெய் என்று கூவி விற்காமல் இந்தச் சிறுவர்கள் வேறு ஏதோ பாடிக் கொண்டு செல்கிறார்களே. நாமும் கூர்ந்து கேட்போம்.

ச்ரி க்ருஷ்ண விஷ்ணோ மது கைடபாரே
பக்தானுகம்பின் பகவன் முராரே
த்ரயஸ்வ மாம் கேஸவ லோகநாத
கோவிந்த தாமோதர மாதவேதி


அருமை அருமை. என்ன ஒரு சந்தம். இவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வரும் போது இந்த அழகான பொருள் நிறைந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே. இந்த இனிய பாடலைக் கேட்பதற்காகவே கடைத்தெருவிற்கு அடிக்கடி வர வேண்டும்.

இந்த நான்கு வரிகளில் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிவிட்டார்கள். க்ருஹ்ணோதி இதி க்ருஷ்ண என்பார்கள் பெரியவர்கள். கவருபவன் எவனோ அவனே கிருஷ்ணன். க்ருஷியதி இதி க்ருஷ்ண என்றும் சொல்வார்கள். பண்படுத்துபவன் என்பதால் இவன் கிருஷ்ணன். அவன் எங்கும் நிறைந்தவன். விஷ்ணு. மது கைடபர்கள் என்னும் அசுரர்களின் எதிரி. பக்தர்களுக்கு அருளுபவன். வலிமை, புகழ், செல்வம், அறிவு, அழகு, பற்றின்மை என்ற ஆறு குணங்கள் கொண்டவனே ஆதி பகவன். முரன் என்னும் அசுரனின் எதிரி. அழகான சுருண்ட முடியைக் கொண்டவன் கேசவன். உலகங்களுக்கெல்லாம் தலைவன் லோகநாதன். அவனை இந்தச் சிறுவர்கள் கடைத்தேற்ற அழைக்கிறார்கள். த்ரயஸ்ய மாம் என்று நாம் ஒவ்வொருவரும் பாட வேண்டுமே. பாடுவோமே. கண்ணா கோவிந்தா தாமோதரா மாதவா எம்மைக் கரையேற்று. எம்மைக் கரையேற்று.