இன்று திருவாடிப்பூரம்! கோதை நாச்சியாரின் திருவவதார தினம்! அவள் மேல் பராசர பட்டரும் வேதாந்த தேசிகனும் இயற்றியுள்ள சுலோகங்களை இன்று சொல்லி அவளை வணங்கலாம்.
**
இந்த சுலோகம் எம்பெருமானாருக்குப் பின்னர் வைணவ ஆசாரியராக எழுந்தருளியிருந்த பராசர பட்டர் இயற்றியது. இவர் கூரத்தாழ்வானின் திருமகனார். இந்த சுலோகம் தற்போது திருப்பாவையை ஓதுவதற்கு முன்னர் தனியனாக ஓதப்படுகின்றது.
நீளா துங்க ஸ்தன கிரி தடீம் ஸுப்த முத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத ஸிர: சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ச்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய:
நீளா துங்க ஸ்தன கிரி தடீம் - நீளாதேவியாகிய நப்பின்னைப் பிராட்டியின் மலைகள் போன்ற தனங்களில்
ஸுப்த முத்போத்ய கிருஷ்ணம் - தூங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணனை எழுப்பி
பாரார்த்யம் ஸ்வம் - தான் அவனுக்கே என்றும் எப்பொழுதும் எந்த நிலையிலும் அடிமையாக இருப்பதை
ச்ருதி சத ஸிர: சித்தம் - நூற்றுக்கணக்கான வேத வேதாந்தங்களில் சொல்லியிருப்பதை
அத்யாபயந்தீ - உணர்த்தி
ஸ்வோச்சிஷ்டாயாம் - தன்னால் சூடிக் கொடுக்கப்பட்ட மாலைகளால்
ச்ரஜி நிகளிதம் - அவனைக் கட்டி
யா பலாத் க்ருத்ய புங்க்தே - பலவந்தமாக அவனை யார் அனுபவிக்கிறாளோ
கோதா தஸ்யை - அந்த கோதைக்கு
நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: - மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள்! என் வணக்கங்கள்!
நப்பின்னைப் பிராட்டியின் மலைகள் போன்ற தனங்களில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பி, நூற்றுக்கணக்கான வேத வேதாந்தங்களில் சொல்லியிருப்பதைப் போல், உயிராகிய தான் இறைவனாகிய திருமகள் கேள்வனான கண்ணனுக்கே உரிமையாக இருப்பதை அவனுக்கு உணர்த்தி, தான் சூடிக்கொடுத்த மாலைகளால் அவனை உரிமையுடன் கட்டி அவனை அனுபவித்த அந்த கோதைக்கே மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள் உரியதாகுக!
**
இந்த சுலோகம் வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்ட கோதா ஸ்துதி என்னும் காவிய நூலில் வரும் முதல் சுலோகம்.
ஸ்ரீ விஷ்ணுசித்த குல நந்தன கல்பவல்லீம்!
ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம்!
சாக்ஷாத் க்ஷமாம்! கருணயா கமலாமி வாந்யாம்!
கோதாம் அனன்ய சரண: சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீ விஷ்ணுசித்த குல நந்தன கல்பவல்லீம் - ஸ்ரீ விஷ்ணுசித்தரான பெரியாழ்வாரின் குலத்திற்கு மகிழ்வினைத் தரும் கற்பகக் கொடியே!
ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம் - திருவரங்கன் என்னும் ஹரிசந்தன மரத்துடன் இணைந்து திவ்ய தரிசனம் தருபவளே!
சாக்ஷாத் க்ஷமாம்! - பொறுமையில் உண்மையிலேயே பூமாதேவியே!
கருணயா கமலாமி வாந்யாம்! - கருணையில் திருமகளாம் இலக்குமியை ஒத்தவளே!
கோதாம்! - கோதையே!
அனன்ய சரண: - வேறு எந்த கதியும் இல்லாத நான்
சரணம் ப்ரபத்யே! - உன் திருவடிகளையே கதியென்று அடைகிறேன்!
ஸ்ரீ விஷ்ணுசித்தரான பெரியாழ்வாரின் குலத்திற்கு மகிழ்வினைக் கொடுக்கும் குலக்கொடியே! அவரது நந்தவனத்தில் இருக்கும் அரங்கராசன் என்னும் ஹரிசந்தன மரத்தில் படர்ந்திருக்கும் கற்பகக்கொடி போன்றவளே!
விஷ்ணுவை என்று சித்தத்தில் வைத்திருக்கும் ஆழ்வார்கள், அடியார்கள் என்னும் அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாக அவர்கள் மகிழத் தோன்றிய கற்பகக் கொடியே!
பொறுமையின் இருப்பிடமான பூமாதேவியே! (ஆண்டாள் பூமாதேவியின் அவதாரம்)கருணையில் திருமகளை ஒத்தவளே! கோதையே! வேறு கதியொன்றும் இல்லாத அடியேன் உன் திருவடிகளையே ஒரே கதியாக அடைகின்றேன்!
**